புதுடெல்லி: தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ.) இணையதளத்தின் செயல்பாடு குறித்து எழுப்பப்பட்ட கவலைகளை களையும் வண்ணம் புதிய ஒரு முறை கடவுச்சொல் (ஓடிபி) அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதையடுத்து, இணையதளம் சிறப்பாக செயல்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ.) போர்ட்டலின் செயல்பாடு குறித்து எழுப்பப்பட்ட கவலைகளை மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை கவனமாக ஆராய்ந்து, புதிய ஒரு முறை கடவுச்சொல் (ஓடிபி) அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இதற்கு பின்னர் இந்த அமைப்பு பயனுள்ள வகையில் செயல்படுகிறது. மேம்பட்ட பாதுகாப்பு நெறிமுறை உட்பட போர்ட்டலில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அம்சங்கள் சிறப்பாக செயல்படுவதும் பயன்படுத்த எளிதாக இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சில பயனர்கள் புகார் செய்திருந்த பிரச்சினைகள் குறித்து பதிலளித்த பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறையானது ஜனவரி 2, 2025 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட ஓடிபி அம்சம், பயனர்களை அங்கீகரிக்கவும், தகவல் அறியும் உரிமை விண்ணப்பங்களில் சேர்க்கப்பட்டுள்ள முக்கியமான தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கவும் செயல்படுத்தப்பட்டது என்று தெளிவுபடுத்தியது. அங்கீகரிக்கப்பட்ட அணுகலை மட்டுமே உறுதி செய்வதன் மூலம், இந்த நடவடிக்கை இணைய பாதுகாப்பை பலப்படுத்துவதுடன் சிறந்த நடைமுறைகளுடன் சீரமைக்கிறது.
ஓ.டி.பி.க்களைப் பெறுவதில் தாமதம் குறித்து கவலைகள் எழுப்பப்பட்டன. என்ஐசி மின்னஞ்சல் களத்திலிருந்து ஓடிபி-கள் உடனடியாக அனுப்பப்படும் போது, என்ஐசி சேவையகம் அல்லது ஜிமெயில் அல்லது யாகூ போன்ற வெளிப்புற மின்னஞ்சல் சேவைகளில் அதிக போக்குவரத்து காரணமாக எப்போதாவது தாமதங்கள் ஏற்படலாம் என்று துறை விளக்கியது. முக்கியமாக, ஓ.டி.பி.க்கள் அவற்றை பயன்படுத்தப்படும் வரை காலாவதியாகாது.
அணுக முடியாத ஹெல்ப்லைன் சேவைகள் குறித்த புகார்கள் தொடர்பாக, பயனர்கள் வழக்கமான அலுவலக நேரங்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 9:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை, பொது விடுமுறை நாட்கள் தவிர) தகவல் அறியும் உரிமை உதவி மையத்தை 011-24622461 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்பதை துறை உறுதிப்படுத்தியுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.