கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் திரூர் என்ற இடத்தில் மசூதியில் நடைபெற்ற விழாவில் யானை ஒன்று மிரண்டு ஒருவரை தூக்கி வீசியது. அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் காயம் அடைந்தனர்.
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தின் திருரில் மசூதி ஒன்று உள்ளது. இங்கு புதியங்காடி என்ற விழா நேற்று நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்த விழாவுக்கு 5 அலங்கரிக்கப்பட்ட யானைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. திருவிழாவில் பங்கேற்ற மக்கள் யானையை தங்கள் செல்போனில் படம் பிடிக்க முயன்றனர். இதில் ஸ்ரீ குட்டன் என்ற ஒரு யானை மிரண்டு கூட்டத்தினரை தாக்கத் தொடங்கியது. ஒருவரை யானை துதிக்கையால் தூக்கி வீசி எறிந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் கோட்டக்கல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
யானை மிரண்டதை பார்த்து திருவிழாவில் பங்கேற்றவர்கள் பீதியில் அந்த இடத்தை விட்டு தப்பியோட முயன்றனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் காயம் அடைந்தனர். மிரண்ட யானையை பாகன்கள் சிலர் சங்கிலியால் கட்டி இழுத்து கட்டுப்படுத்தினர். யானையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சுமார் 2 மணி நேரம் ஆனது.