புதுடெல்லி: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் மூன்று நக்சல்கள் கொல்லப்பட்டதாக அம்மாநில துணை முதல்வர் விஜய் சர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை இலாகாவை வைத்திருக்கும் விஜய் சர்மா, “சுக்மாவில் நடந்த நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் வெற்றி பெற்றுள்ளனர். இதுவரை, மூன்று நக்சல்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தேடுதல் நடவடிக்கை இன்னும் நடைபெற்று வருகிறது.
ஜனவரி 6-ஆம் தேதி பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல்கள் நடத்திய கன்னிவெடி தாக்குதலில் எட்டு பாதுகாப்புப் படையினரும் அவர்களது வாகன ஓட்டுநரும் கொல்லப்பட்ட நிலையில், அவர்கள் மீது பாதுகாப்புப் படையினரிடையே பெரும் கோபம் நிலவுகிறது. நான் அவர்களை (பாதுகாப்புப் படையினரை) சந்தித்தேன். நமது வீரர்களின் வலிமை மற்றும் தைரியத்துடன், (நக்சலைட்டு) அச்சுறுத்தல் குறிப்பிட்ட காலத்திற்குள் ஒழிக்கப்படும் என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்தார்.
மார்ச் 2026-க்குள் நாட்டிலிருந்து நக்சல்கள் ஒழிக்கப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்களன்று தெரிவித்திருந்தார். மேலும் சத்தீஸ்கரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டவர்களின் தியாகம் வீண் போகாது என்றும் அவர் கூறினார்.
இன்று (வியாழக்கிழமை) காலை, சுக்மா மற்றும் பிஜப்பூர் மாவட்டங்களின் எல்லையில் உள்ள ஒரு காட்டில் பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழு நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது என்கவுண்டர் சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மாவட்ட ரிசர்வ் போலீசார், சிறப்புப் பணிக்குழு மற்றும் கோப்ரா ஆகியவற்றைச் சேர்ந்த வீரர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதன் மூலம், இந்த ஆண்டு இதுவரை சத்தீஸ்கரில் நடந்த வெவ்வேறு என்கவுண்டர்களில் 9 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு, சத்தீஸ்கரில் நடந்த வெவ்வேறு என்கவுன்டர்களில் 219 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.