ஆளுநர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவுகளைப் போட்டு தமிழக மக்களையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவை உறுப்பினர்களையும் அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதை பேரவை வன்மையாகக் கண்டிப்பதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது: கடந்த 6-ம் தேதி சட்டப்பேரவைக்கு உரை நிகழ்த்துவதற்காக ஆளுநர் வந்து அதை வாசிக்காமல் சென்றார். பின்னர் அதுதொடர்பாக தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் ஒரு கருத்தை வெளியிட்டார். சற்று நேரத்தில் அதை நீக்கிவிட்டு வேறொரு கருத்தை பதிவிட்டார். பிறகு அதையும் நீக்கிவிட்டு மற்றொரு கருத்தையும் வெளியிட்டார். இவ்வாறு கருத்து தெரிவிப்பதிலும் அவருக்கு தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.
1999-ம் ஆண்டு முதல் ஆளுநரின் உரையை நேரடி ஒளிபரப்பு செய்ய தூர்தர்சன் சேனலுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பேரவை நடவடிக்கையை ஒளிபரப்ப ரூ.44 லட்சத்து 65,710 வழங்கப்பட்டது. ஆனால், கடந்த முறை ஓ.பி. வேன் (நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்யும் வாகனம்) கிடைக்கவில்லை என்று கூறி தூர்தர்சன் அதிகாரிகள் தவிர்த்துவிட்டார்கள். அந்த ஓ.பி. வேன் குஜராத் தேர்தல் பிரசாரத்துக்காக சென்றுவிட்டதாக தெரிவித்தனர். எனவே, இந்த முறை தூர்தர்சனுக்கு நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி வழங்கவில்லை. ஆனால் இம்முறை ஆளுநர் வந்தபோது தூர்தர்சன், ஆல் இந்திய ரேடியோ நிறுவனங்கள் அனுமதி பெறாமலேயே அவைக்கு வந்து வீடியோ எடுத்தனர்.
நம்மிடம் பணம் வாங்கிவிட்டு கடந்த முறை வர மறுத்தனர். இன்று சட்டப்பேரவைக்கு வந்து கெடுபிடி செய்கின்றனர். அவர்களை யார் இயக்குகிறார்கள். இப்போது, தமிழக அரசே டிஐபிஆர் (செய்தி மக்கள் தொடர்புத் துறை) மூலம் பேரவை நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்கிறது. கேள்வி நேரம், முதல்வர் உரை, அமைச்சர்களின் உரை ஆகியவை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். பேரவை நடவடிக்கை முழுவதையும் ஒளிபரப்பு செய்யவேண்டும் என்பதே முதல்வரின் விருப்பம். ஆளுநர் தூர்தர்சன் மூலம் தனது உரையைப் பதிவு செய்து, அதை வெட்டி, ஒட்டி வெளியிட முயற்சி செய்துள்ளார். அதைக் கண்டுபிடித்து முதல்வர் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்தார்.
இந்நிலையில் ஆளுநர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவுகளைப் போட்டு தமிழக மக்களையும், மக்கள் தேர்ந்தெடுத்த உறுப்பினர்களையும் அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதை பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது. ஆளுநர், இப்படிப்பட்ட நிலைபாட்டை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 176 (1)-ன்படி, அமைச்சரவை எழுதிக் கொடுத்த தீர்மானத்தை வாசிப்பது மட்டும்தான் ஆளுநரின் ஜனநாயக கடமை. தேசிய கீதத்தை முதலில் பாடுங்கள் என்று கோரிக்கை வைக்க ஆளுநருக்கு எந்த உரிமையும் இல்லை. சட்டப்படி நடந்துகொள்ள வேண்டுமே தவிர, கோரிக்கை வைப்பது முறையல்ல. விதிப்படி இல்லாமல் இவ்வாறு நடந்து கொள்ளக்கூடாது என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.