புதுடெல்லி: சாலை விபத்தில் காயம் அடைந்தவருக்கு பணமில்லா சிகிச்சை அளிக்கும் திட்டம் மார்ச் 2025-க்குள் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
நெடுஞ்சாலைகளில் விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கையை குறைக்க, மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம் கடந்த ஆண்டு மார்ச் 14-ம் தேதி பணமில்லா சிகிச்சை திட்டத்தை அமல்படுத்தியது. இந்த திட்டம் அசாம், சண்டிகர், புதுச்சேரி உட்பட சில மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், பணமில்லா சிகிச்சை திட்டம் வரும் மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களிலும் அமல்படுத்தப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த போக்குவரத்துத் துறை அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பாரத் மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமை வகித்தார். அப்போது, சாலை விபத்துகளில் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை பணமில்லா சிகிச்சை அளிக்கும் திட்டத்தை அறிவித்தார்.
இதுகுறித்து அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது: கடந்த 2024-ம் ஆண்டு மட்டும் சாலை விபத்துகளில் 1.80 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் தலை கவசம் அணியாததால் மட்டும் 30 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். பள்ளி, கல்லூரிகளில் நுழைவு வாயில், வெளியேறும் வழி ஆகியவை சரியாக இல்லாத காரணங்களால் விபத்துகளில் சிக்கி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க அல்லது குறைக்க ஆட்டோ ரிக் ஷாக்கள், பள்ளி பஸ், வேன்களுக்கு வழிகாட்டி நெறிமுறைகள் கொண்டு வரப்படும்.
சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி, சாலைகளில் விபத்து நடந்து 24 மணி நேரத்துக்குள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தால், காயம் அடைந்தவருக்கு 7 நாட்கள் பணமில்லா சிகிச்சை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்துகிறது. அதன்படி காயம் அடைந்தவர் ரூ.1.5 லட்சம் வரை பணமில்லாமல் சிகிச்சை பெறலாம். அத்துடன் அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி உயிரிழப்போரின் குடும்பத்துக்கு நஷ்ட ஈடாக ரூ.2 லட்சம் வழங்கப்படும்.
இந்தத் தொகையை அரசே ஏற்றுக் கொள்ளும். பணமில்லா சிகிச்சை திட்டத்தின் மூலம் அசாம், சண்டிகர், பஞ்சாப், உத்தராகண்ட், புதுச்சேரி, ஹரியானாவில் இதுவரை 6,840 பேர் பலனடைந்துள்ளனர். இந்தத் திட்டம் மார்ச் மாதம் முதல் விரிவுபடுத்தப்படும். இந்தத் திட்டம் நாடு முழுவதும் செயலுக்கு வரும்போது, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் உயிர்களை காப்பாற்ற முடியும். சாலைகளில் விபத்துகளை குறைக்க இனிமேல் புதிய பஸ்கள் மற்றும் டிரக்குகளில் 3 அதிநவீன தொழில்நுட்பங்கள் கட்டாயமாக்கப்படும். அதில், ஓட்டுநர்கள் தூங்கினால், உடனடியாக எச்சரிக்கை வழங்கும் வகையில் புதிய பஸ்கள், டிரக்குகளில் தொழில்நுட்பம் அமையும். மேலும், ஓட்டுநர்கள் ஒரு நாளைக்கு 8 மணி நேரத்துக்கு மேல் பணிபுரியாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு, ஆதார் அடிப்படையில் புதிய தொழில்நுட்பம் கொண்டு வருவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்.