டெல்லி வளர்ச்சி தொடர்பான அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறக்கூடாது என்று மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லி சட்டப் பேரவைக்கு வரும் பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அங்கு தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் வரும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த பட்ஜெட்டில் டெல்லி யூனியன் பிரதேசத்துக்குரிய அறிவிப்புகள், திட்டங்கள் எதுவும் இடம்பெறக்கூடாது என்று மத்திய அரசுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியதாவது: டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் டெல்லி மாநிலத்துக்குரிய வளர்ச்சித் திட்டங்கள், இலவச அறிவிப்புகள் எதுவும் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறக்கூடாது என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இலவசத் திட்டங்களை அறிவிக்கின்றன. இந்த விஷயத்தில் எங்களது கைகள் கட்டப்பட்டுள்ளன. இலவசத் திட்டங்கள் என்ன என்பதை தீர்மானிப்பது கடினம். ஏனெனில் ஒருவருக்கு இலவசம் என்பது மற்றொருவருக்கு உரிமையான விஷயமாக இருக்கலாம்.
டெல்லியில் தேர்தல் பணிகள் முடியும் வரை டெல்லி தொடர்பான அறிவிப்புகள் எதுவும் மத்திய பட்ஜெட்டில் சேர்க்கப்படக் கூடாது. இதுதொடர்பான உத்தரவை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம். இவ்வாறு ராஜீவ் குமார் தெரிவித்தார்.