பல்லடம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை வழக்கில், 42 நாட்களாகியும் குற்றவாளிகள் கண்டுபிடிக்காத நிலையில், வழக்கை சிபிஐயிடம் தமிழ்நாடு முதல்வர் ஒப்படைக்க வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார்.
பல்லடம் அருகே சேமலைக்கவுண்டன்பாளையத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகன் ஆகிய மூவர் கடந்த நவ. மாத இறுதியில் மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், 42 நாட்களாகியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் இருக்கும், திமுக அரசை கண்டித்தும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் திருப்பூர் மாவட்டம் கொடுவாயில் இன்று (ஜன. 9) மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில் அவர் பேசியது: “பாதிக்கப்பட்ட குடும்பத்தை கடந்த டிச.6-ம் தேதி நேரில் சந்தித்தோம். அன்றைக்கே தமிழ்நாடு முதல்வருக்கு, எவ்வித அரசியலும் இன்றி வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி வெளிப்படையாக கடிதம் எழுதினோம். ஆனால் ஒரு மாதம் ஆகியும் பதில் இல்லை. கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 13-ம் தேதி சிபிஐ அதிகாரத்தை திமுக அரசு ரத்து செய்தது.
ஒரு குற்றவாளியை பிடிக்கவில்லையென்றால், குற்றவாளிக்கு பயம் நீங்கிவிடும். கூலிப்படை தொடர்ந்து வந்து கொண்டே இருப்பார்கள். இங்கு நடந்த 3 பேர் கொலைக்கு நீதி கிடைக்கவில்லையென்றால், நாம் எதற்காக பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருக்க வேண்டும். தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக எஸ்.ஐ,., கான்ஸ்டபிள் தேர்வு நடத்தப்படவில்லை. இதனால் தேர்வுக்கு தயாரான மாணவர்கள் இன்றைக்கு அரசுக்கு எதிராக, பிரஸ்மீட் தந்துள்ளனர். அரசுக்கு எதிராக பேசினால், காவல்துறையில் வேலை கிடைக்காது.
காவல் துறையில் காலிப் பணியிடங்களை ஆண்டுதோறும் அதிகரிக்கும்போது, எப்படி குற்றங்களை கண்டறிய முடியும்? தொடர்ந்து தடுக்கவும் முடியும்? 3 பேர் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்பது எங்கள் அடிப்படை கோரிக்கை. இன்றைக்கு இந்த பகுதியில் வாழும் 50 ஆயிரம் பேரை சந்தித்து கையெழுத்து பெற்று, இங்குள்ள மக்களுடன் சென்று தமிழ்நாட்டு ஆளுநரை சந்தித்து, குற்றவாளியை கண்டுபிடிக்க புகார் அளித்து வலியுறுத்துவோம்.
குற்றவாளிகளை நாங்கள் கண்டுபிடிக்கப்போகிறோம் என்பதை விட, வேட்டையாட போகிறோம். உள்துறை அமைச்சரை சந்தித்து புலனாய்வில் கைதேர்ந்த அதிகாரிகளை கொண்டு விசாரிக்க நாங்கள் வலியுறுத்துவோம். காவல்துறை போன்ற ஜனநாயக அமைப்பு மீது நம்பிக்கை குறைவது, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை குறையும். தமிழ்நாடு முதல்வர் தன்னுடைய அகங்காரத்தை விட்டுவிட்டு, இதனை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். இதற்கு சிறப்பு அனுமதி தர வேண்டும். இதை கொடுக்கவில்லை என்றால் இவர் மக்களுக்கான முதல்வரா?
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்தை கண்டித்து, நான் சாட்டையால் அடித்துக்கொண்டேன். அரசியல் கட்சிகள் தோற்கலாம். ஆளும் அரசு தோற்கலாம். ஆனால் சிஸ்டம் தோற்க்ககூடாது. இங்கு சிஸ்டம் தோற்றுள்ளது. யார் அந்த சார்? என்ற வாசகம் அடங்கிய டீ-சர்ட்டுடன் தான் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளோம். அனைவரும் இணைந்து போராட வேண்டிய தருணம் இது. செருப்பை அணியாமல் இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால், அதனையும் ஒரு வேள்வியாக செய்யத்தயார்” என்று அவர் பேசினார். இதில் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.