லால் ஏஞ்சல்ஸ்: லாஸ் ஏஞ்சல்ஸ் முழுவதும் கட்டுப்பாடு இல்லாமல் பரவி வரும் காட்டுத்தீக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர். காட்டுத்தீ காரணமாக பரவலான அழிவு ஏற்பட்டு, அங்கு வசித்து வரும் மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே, ஹாலிவுட்டுக்கான குறியீடாக விளங்கும் ஹாலிவுட் மலைகளில், சன்செட் என்றழைக்கப்படும் புதிய தீ வேகமாக பரவி வருகிறது.
லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்புத்துறையின் கூற்றுப்படி, சன்செட் தீ தற்போது 20 ஏக்கர் வரை பரவியுள்ளது. மேலும் அது ரன்யான் கன்யோன் முதல் வாட்டலஸ் பார்க் இடையேயான பகுதியை எரித்து நாசமாக்கியுள்ளது. ஹாலிவுட் அடையாளத்தை தவிர்த்து, ஆண்டு தோறும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா நடைபெறும் டோல்பி தியேட்டரும் சன்செட் தீ தாக்கும் அபாயத்தில் உள்ளது. அதேபோல் ஹாலிவுட்டன் பிற அடையாளங்களான, ஹாலிவுட் பவுல் வெளிப்புற ஆம்பிதியேட்டர் மற்றும் ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் போன்றவையும் தீ தாக்கும் அபாயத்தில் உள்ளன.
புதிய தீ பரவல் காரணமாக லாரல் கன்யான் பவுல்வார்ட் முதல் முல்ஹேல்லண்ட்-ன் சில பகுதிகளில் கட்டாய வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அது பிரபலங்களின் குடியிருப்புக்கு பெயர் பெற்ற ஹாலிவுட் பவுல்வர்ட் தெற்கே வரை நடைமுறைப்படுத்தப்பட்டது.
லாஸ் ஏஞ்சல்ஸுக்கு மேற்கே பாலிசேட்ஸ் தீ விபத்து பகுதிக்கு அருகே உள்ளவர்களும் வெளியேறும் படி உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், ஹர்ஸ்ட் தீ விபத்துக்கு அருகில் உள்ள சான் ஃபெர்னான்டோ பள்ளத்தாக்கில் உள்ளவர்களும் தங்களின் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. ஈட்டன் தீ விபத்து காரணமாக சாண்டா மோனிகா மற்றும் அல்டாடேனாவின் சில பகுதிகளிலும் மக்கள் வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் அதன் அருகிலிருக்கும் வென்டியுரா கவுன்டியிலும் தற்போது ஆறு இடங்களில் காட்டுத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, உட்லி தீ கொஞ்சம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள காட்டுத்தீ துளியும் கட்டுப்படுத்தப்படவில்லை
செவ்வாய்க்கிழமையில் உருவான பாலிசேட்ஸ் தீ விபத்தே முதலில் உருவானது, இது லாஸ் ஏஞ்சல்ஸ் வரலாற்றில் மிகவும் மோசனமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரமின்றி தவிப்பு: காட்டுத்தீ காரணமாக தங்களின் உடமைகளை விட்டு விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை சுமார் 1,37,000 பேர். இதனிடையே தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சுமார் 17 மில்லியன் மக்கள் வியாழக்கிழமை வரை புகை மண்டலம் மற்றும் துசுகளில் வசிக்கவேண்டியது இருக்கும் எனக்கூறப்படுகிறது.
புதன்கிழமை மதிய தகவலின் படி, 1.5 மல்லியன் மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருவதாக PowerOutage.us தெரிவித்துள்ளது. அதேபோல், வெண்டியுரா கவுன்டியில் சுமார் 3,34,000 மக்களும், லாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்டியில் 9,57,000 பேரும் மின்சாரமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
பில்லி கிரிஸ்டல், மாண்டி மூரே, ஜேமியி லீ கர்டிஸ் மற்றும் பாரிஸ் ஹில்டன் உள்ளிட்ட பல ஹாலிவுட் பிரபலங்களும் இந்தக் காட்டுத்தீ காரணமாக தங்களின் உடைமைகளை இழந்துள்ளனர். அதேபோல், ஆடம் சாண்ட்லர், பென் அஃப்லெக், டாம் ஹான்க்ஸ் மற்றும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் போன்றோரின் வீடுகளும் காட்டுத்தீ பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ளன.
செவ்வாய்க்கிழமை பாலிசேட்ஸில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து கலிபோர்னியா மாநில கவர்னர் அவசரநிலையை அறிவித்திருந்தார்.
ஜோ பைடன் மீது ட்ரம்ப் தாக்கு: அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், கலிபோர்னியா ஆளுநரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தவறி விட்டனர் என்று புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் சாடியுள்ளார். ஜனவரி 20-ம் தேதி பதவியேற்க உள்ள ட்ரம்ப், தற்போதைய காட்டுத்தீ பிரச்சினையை எதிர்த்து போராடுவதற்கு தேவையான ஆதாரங்களின்றி ஜோ பைடன் தன்னை விட்டுச் செல்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைதளமான ட்ரூத் சோசியலில் ட்ரம்ப் கூறுகையில், “தீயணைப்பு இயந்திரங்களில் தண்ணீர் இல்லை, FEMA வில் பணம் இல்லை. இதைத்தான் ஜோ பைடன் எனக்கு விட்டுச்செல்கிறார். நன்றி ஜோ!” என்று தெரிவித்துள்ளார்.