விசாகப்பட்டினத்தில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
பிரதமர் மோடி, நேற்று தனி விமானம் மூலம் டெல்லியிலிருந்து ஆந்திர மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். அங்கு அவரை, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், பாஜக மாநில தலைவர் புரந்தேஸ்வரி, மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அதன் பின்னர், பிரதமர் மோடி, முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் திறந்தவெளி ஜீப்பில் சிரிபுரம் கூட்டுச் சாலையிலிருந்து ஆந்திரா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மைதானம் வரை நடைபெற்ற ரோட் ஷோவில் பங்கேற்றனர். வழிநெடுக அவர்கள் மீது தொண்டர்களும், பொதுமக்களும் மலர் தூவி வரவேற்றனர். பின்னர், பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசினார்.
இதைத் தொடர்ந்து ரூ.2.08 லட்சம் கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். விசாகப்பட்டினம் ரயில்வே மண்டலம், நவீன தொழிற்பேட்டை, பசுமை ஹைட்ரஜன் மையம் போன்ற திட்டங்கள் இதில் அடங்கும்.
அந்த விழாவில் ஆளுநர் அப்துல் நசீர், அமைச்சர் நாரா லோகேஷ், அனகாபல்லி மக்களவைத் தொகுதி எம்.பி. சி.எம்.ரமேஷ், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.