விஜய்யின் த.வெ.க கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டம் நாளை நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தின் முடிவில் கட்சியின் புதிய நிர்வாகிகள் இறுதி செய்யப்படுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, அக்டோபர் 27 ஆம் தேதி கட்சியின் முதல் மாநில மாநாட்டையும் நடத்தி முடித்தார். ஆனாலும் கட்சிக்கென நிர்வாகிகள் நியமிக்கப்படாமலேயே இருந்தனர். மக்கள் இயக்கமாக இருந்த போது பொறுப்பில் இருந்தவர்கள்தான் கட்சிப் பொறுப்பையும் ஏற்று பணியாற்றி வந்தனர். இந்நிலையில், கட்சிக்கென அமைப்புரீதியாக இன்னும் மாவட்டங்களை பிரித்து அதற்கு புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளில் த.வெ.க முகாம் இறங்கியிருந்தது. இதற்காகவே அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்தும் மாவட்டவாரியாக சென்று பல்வேறு ஆலோசனை கூட்டங்களையும் நடத்தினார்.
‘கட்சியில் நீண்ட காலம் உழைத்தவர்களுக்குதான் பதவி.’ என பல இடங்களிலும் பேசினார். கடந்த டிசம்பர் முதல் வாரத்திலேயே புதிய நிர்வாகிகள் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. தை பிறந்த பிறகு புதிய அறிவிப்புகளை வெளியிடலாம் என அதை தள்ளிவைத்ததாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில்தான் மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிர்வாகிகளுக்கு நாளை பனையூரில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறவிருக்கிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் 19 விதமான அணிகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். அதுசம்பந்தமாகவும் நாளைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்கிறார்கள். கட்சியின் தலைவரான விஜய்யும் நாளை நிர்வாகிகளை சந்திக்கக்கூடும் என்கிறார்கள்.
நாளை மாவாட்ட அளவிலான பொறுப்புகள் குறித்து நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கிவிட்டு தை முதல்நாளில் புதிய நிர்வாகிகள் பற்றிய அறிவிப்பை வெளியிடவிருப்பதாகவும் சொல்கிறார்கள். பிப்ரவரி அல்லது மார்ச்சில் இருந்து விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் ஒரு தகவல் இருக்கிறது. அதுசம்பந்தமாக நிர்வாகிகளுக்கு சில உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் என்கிறார்கள்.
நாளை காலை 10 மணிக்கு நடைபெறவிருக்கும் கூட்டத்தில் எடுக்கப்பட போகும் முடிவுகள் கட்சியின் செயல்பாடுகளை வேகப்படுத்துமா என்கிற ஆர்வத்தில் த.வெ.க தொண்டர்கள் இருக்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs