டெஸ்ட் கிரிக்கெட்டை இன்னும் சுவாரஸ்யப்படுத்தும் வகையிலும் வருவாயைப் பெருக்கும் வகையிலும் ‘Two Tier Test System’ என்ற முறையை ஐ.சி.சி அமல்படுத்தும் யோசனையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.
டெஸ்ட்டை பிரபலப்படுத்தும் வகையில்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற ஒன்றை ஐ.சி.சி அறிமுகப்படுத்தியது. இரண்டு ஆண்டுகளில் ஒரு அணி ஆடும் தொடர்களின் அடிப்படையில் அவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்படும். சுழற்சியின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் ஆடும்.
இந்த முறையில் மாற்றம் கொண்டு வரும் வகையில் ஐ.சி.சி யோசித்துக் கொண்டிருப்பதாக தெரிகிறது. அதன்படி, டெஸ்ட் ஆடும் அணிகளை Division 1, Division 2 என இரண்டாக பிரிக்கும் முடிவில் இருப்பதாகவும் தெரிகிறது. இந்த முறைக்கே ‘Two Tier Test System’ என பெயர் வைத்திருப்பதாகவும் சொல்கிறார்கள். Division 1 இல் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளும் Division 2 வில் வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், அயர்லாந்து ஜிம்பாப்வே ஆகிய அணிகளும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பிட்ட காலத்திற்கான சுழற்சியின் முடிவில் முதல் டிவிசனில் கடைசி இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இரண்டாம் டிவிசனுக்கு மாற்றப்பட்டு, இரண்டாம் டிவிசனில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் முதல் டிவிசனுக்கு மாற்றப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
2027 வரைக்குமான போட்டி அட்டவணைகளை ஐ.சி.சி வெளியிட்டுவிட்டதால் அதன்பிறகு இந்த ‘Two Tier’ முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் சொல்லப்படுகிறது. ஐ.சி.சி யின் சேர்மன் ஆகியிருக்கும் ஜெய்ஷா ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டுகளுடன் இந்த முறையை அமல்படுத்துவது குறித்து கலந்தாலோசித்திருக்கிறார். அதனால்தான் கிரிக்கெட் உலகில் திடீர் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது.
கிரிக்கெட் உலகம் இரண்டாக பிரிந்து நின்று இந்த முறைக்கு ஆதரவையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றது.
‘கடினமாக உழைத்து டெஸ்ட் அந்தஸ்தை பெற்றிருக்கும் அணிகளுக்கு இந்த முறை பலத்த இடியாக இருக்கும். கடும் முயற்சிகளுக்கு பிறகு டெஸ்ட் அந்தஸ்தை பெற்று அவர்கள் தங்களுக்குள்ளாகவே ஆடிக்கொள்ளும் நிலை ஏற்படும்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்கென ஒரு மாபெரும் வரலாறு இருக்கிறது. பொருளாதார சிக்கலை காரணம் காட்டி எங்களை இரண்டாவது டிவிசனில் வைக்கப்போகிறீர்கள். இது சரியான முறைல்ல. மற்ற அணிகளுக்கு கொடுப்பது போல எங்களுக்கும் சமமான வருவாயை கொடுங்கள். எங்களின் கட்டமைப்பை மேம்படுத்துகிறோம். அமைப்பை சரி செய்கிறோம். அதுதான் கிரிக்கெட்டை வளர்க்கும்.’ என வெஸ்ட் இண்டீஸின் ஜாம்பவான க்ளைவ் லாய்ட் பேசியிருக்கிறார்.
‘சிறந்த அணிகள் தங்களுக்குள்ளாக அதிகம் மோதிக் கொள்ளும் போதுதான் இந்த பார்மட்டை உயிர்ப்போடு வைத்திருக்க முடியும். இந்தியா vs ஆஸ்திரேலியா பார்டர் கவாஸ்கர் தொடர்தான் இதற்கு சிறந்த உதாரணம்.’ என இந்த ‘Two Tier’ முறைக்கு ஆதரவாக பேசியிருக்கிறார் ரவி சாஸ்திரி.
டெஸ்ட் கிரிக்கெட்டை சுவாரஸ்யப்படுத்துகிறேன், அதை உயிர்ப்போடு வைத்துக் கொள்கிறேன் என்பதெல்லாம் சரிதான். ஆனால், விளையாட்டு என்பது எல்லாருக்குமானதாக இருக்க வேண்டும். தொடர்ச்சியாக எல்லாவிதத்திலும் பொருளாதாரம் மற்றும் அதிகார பலமிக்க போர்டுகளுக்கு சாதகமாகவே முடிவுகழ் எடுக்கப்படுவது கிரிக்கெட்டை வளர்க்க எந்தவிதத்திலும் உதவாது. இப்படியெல்லாம் செய்துவிட்டு கிரிக்கெட்டை வளர்க்கிறோம் என அமெரிக்காவில் சென்று உலகக்கோப்பையை நடத்துவதில் யாருக்கு என்ன பயன்?
‘Two Tier Test System’ பற்றிய உங்களின் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்.