சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை சுட்டிக்காட்டி, யார் அந்த சார்? என அதிமுகவினர் எழுப்பிய கேள்விக்கு, அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட அக்கட்சி நிர்வாகியின் கைதை சுட்டிக்காட்டி ‘இவர் தான் அந்த சார்’ என்ற பதாகைகளை ஏந்தியபடி சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வெளிநபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் தழுவிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடையதாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், இவ்வழக்கில் வேறு ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து யார் அந்த சார்? என்ற கேள்வியை எதிர்க்கட்சியினர் முன்வைத்து, மாணவிக்கு நியாயம் கிடைக்க கோரி தீவிர போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன் ஒருபகுதியாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்எல்ஏ-க்கள் பேரவை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேரவைக்கு கருப்பு சட்டை மற்றும் யார் அந்த சார்? என்ற பேட்ஜை அணிந்து அதிமுக உறுப்பினர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வந்தனர். இதற்கிடையே அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிமுக நிர்வாகி சுதாகர் கைது செய்யப்பட்டார்.
இதை சுட்டிக்காட்டி ‘இவர் தான் அந்த சார்’ என்ற முழக்கத்தை சமூக வலைதளங்களில் திமுக ஐடி பிரிவு பகிரத் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக இன்று (ஜன.10) பேரவைக்கு வந்த திமுக எம்எல்ஏ-க்கள் ‘இவர் தான் அந்த சார்’ என்ற பதாகைகளை எடுத்து வந்து பேரவை வளாகத்தில் முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் திமுக எம்எல்ஏ பரந்தாமன் பேசுகையில், “பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்துக்கு புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது, விசாரணையில் சொல்லப்பட்ட வார்த்தைகளை வைத்துக் கொண்டு எதிர்க்கட்சியினர் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் குறித்து வெளியில் பேசுவது சட்டத்துக்கு புறம்பானது.
விசாரணையில் தான் யார் என்று கண்டறிந்து, அவர்களை நீதிமன்றம் முன் நிறுத்த முடியும். இதை புரிந்து கொள்ளாத அதிமுக உறுப்பினர்கள், விடை தெரியாதது போல் கருப்பு சட்டை, யார் அந்த சார்? என்ற பேட்ஜ் அணிந்து சட்டப்பேரவை நடவடிக்கைகளில் எம்எல்ஏ-க்கள் பங்கேற்கின்றனர். அரசின் பொறுப்பு விடை கொடுப்பது. அந்த வகையில் ‘இவர் தான் அந்த சார்’ என்பதை வெளிச்சம் போட்டு காடியுள்ளோம், என்றார்.
அதேநேரம், இன்றைய தினம் அதிமுக உறுப்பினர்கள் கறுப்பு சட்டை அணிந்து பேரவைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.