சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து, பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இத்தொகுதியில் திமுகவே போட்டியிடும் என்று தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி இடைத் தேர்தல் வரவிருப்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் இளங்கோவன் மறைவு அடைந்ததையோட்டி இடைத் தேர்தல் வரவிருக்கிறது.
2026 சட்டமன்ற பொது தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், முதலமைச்சர் மற்றும் இண்டியா கூட்டணியின் தமிழ்நாட்டின் தலைவராக விளங்கி கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின், முதல் முறையாக கேட்டுக்கொண்டதற்கு இணங்க அகில இந்திய காங்கிரஸ் தலைமை மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையின் தீவிர ஆலோசனைக்கு பிறகு நாங்கள் அனைவரும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு இந்திய கூட்டணியின் சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் போட்டியிடுவார் என்று இன்று உறுதிசெய்யப்பட்டது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க நாட்டில் ஜனநாயகம் மலரச் செய்ய நாம் அனைவரும் ஒன்றினைந்து இந்திய கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம்” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.