புதுடெல்லி: இடஒதுக்கீடு பயன்களை ஏற்கெனவே பெற்று முன்னேறிய ‘கிரீமி லேயர்’ பிரிவினரை இட ஒதுக்கீடு சலுகையில் இருந்து நீக்கலாமா வேண்டாமா என்ற முடிவை அரசு நிர்வாகம் மற்றும் சட்டமன்றம்தான் எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
பட்டியலினத்தவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களுக்குள் உட் பிரிவை வகைப்படுத்த அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு கடந்த 2004-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை கடந்தாண்டு ரத்து செய்த உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ‘‘சமூக ரீதியாக, கல்வி ரீதியாக மிகவும் பின்தங்கியிருப்பவர்களைின் மேம்பாட்டுக்காக, பட்டியலினத்தவருக்குள் உட்பிரிவுகளை வகைப்படுத்தும் அதிகாரம் மாநிலங்களுக்கு உள்ளது’’ என தீர்ப்பளித்தது.
இந்த அரசியல்சாசன அமர்வில் இடம்பெற்ற நீதிபதி காவை தனியாக ஒரு தீர்ப்பு வழங்கினார். அதில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினரில் இடஒதுக்கீட்டால் ஏற்கெனவே பயன் அடைந்து முன்னேறிய ‘கிரீமி லேயர்’ பிரிவினரை கண்டறிந்து, அவர்களுக்கு மீண்டும் இட ஒதுக்கீட்டு சலுகையை மறுக்கும் வகையில் மாநில அரசுகள் கொள்கையை உருவாக்க வேண்டும்’’ என கூறினார்.
இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்து 6 மாதங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் கிரீமி லேயரை அடையாளம் காணும் கொள்கையை அரசுக்கும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் பி.ஆர்.காவை மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி காவை கூறுகையில், ‘‘ கடந்த 75 ஆண்டுகளில் இட ஒதுக்கீட்டு சலுகையால் பயன் அடைந்து, மற்றவர்களுடன் போட்டியிடும் அளவுக்கு முன்னேறியவர்களை, இடு ஒதுக்கீட்டு சலுகையில் இருந்து நீக்க வேண்டும் என்ற எங்கள் கருத்தை தெரிவித்தோம். ஆனால் இது குறித்து அரசு நிர்வாகமும், சட்டமன்றமும்தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி காவை கூறினார்.