புதுடெல்லி: டெல்லி மீதான புறக்கணிப்பு மற்றும் வெறுப்பு காரணமாகவே பாஜகவால் 25 வருடங்களாக தலைநகரில் ஆட்சிக்கு வர இயலவில்லை என்று அரவிந்த் கேஜ்ரிவால் அக்கட்சியை கடுமையாக சாடியுள்ளார்.
டெல்லி பேரவைத் தேர்தலை முன்னிட்டு நடந்த பேரணியில் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பாரதிய ஜனதா கட்சி டெல்லியை குற்றங்களின் தலைநகராக மாற்றிவிட்டது. டெல்லியில் கொள்ளைகள், செயின் பறிப்பு, கும்பல் சண்டைகள் அதிகரித்துவிட்டன. பாஜக டெல்லி மக்களை வெறுக்கிறது. அந்த வெறுப்பினால் தான் அவர்களால் கடந்த 25 ஆண்டுகளாக மீண்டும் ஆட்சிக்கு வர முடியுவில்லை.
ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், குடியிறுப்பு நலச்சங்கங்கள் (RWAs) டெல்லி அரசிடமிருந்து நிதி பெற்று தங்களின் பகுதிகளில் தனியார் காவலர்களை நியமிப்பார்கள். போலீஸுக்கு மாற்றை உருவாக்குவது நமது நோக்கம் இல்லை.
பாஜக தற்போது தர்ணா கட்சியாக மாறிவிட்டது. பாஜக ரோகிங்கியாக்கள் பெயரில் டெல்லியின் பூர்வ வாக்களர்களை பட்டியலில் இருந்து நீக்குவது குறித்து புகார் அளிக்க நேற்று நான் தேர்தல் ஆணையத்துக்குச் சென்றிருந்தேன்.” என்றார்.
இதனிடையே, கேஜ்ரிவாலின் பூர்வ வாக்களர்கள் குறித்த கருத்தைக் கண்டித்து பாஜக தொண்டர்கள் டெல்லியின் ஃபேரோஸ் ஷா சாலையில் உள்ள அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டிக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், டெல்லியில் பதற்றம் அதிகமானது. நிலைமையை சமாளிக்க போலீஸார் போராட்டம் நடத்தியவர்கள் மீது தண்ணீரைப் பீச்சி அடித்து அவர்களை விரட்டினர்.