திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று காலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வரும் 19-ம் தேதி வரை பக்தர்களுக்கு சொர்க்கவாசல் தரிசனம் நடைபெறுகிறது.
இதற்காக ஆன்லைன் மூலம் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் ஏற்கெனவே விநியோகம் செய்துவிட்டது. இந்நிலையில், நேற்று அதிகாலை 5 மணி முதல் திருப்பதியில் 8 இடங்கள், திருமலையில் ஒரு இடத்தில் இலவச தரிசன டோக்கன்களை பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இலவச டோக்கன் பெறுவதற்காக திருப்பதியில் ஏற்பாடு செய்திருந்த 8 இடங்களிலும் புதன்கிழமை காலை முதலே பக்தர்கள் குவிய தொடங்கினர். பாதுகாப்புக்கும் 3,000 போலீசார் போடப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் புதன்கிழமை இரவு சுமார் 9.30 மணியளவில் டோக்கன் வாங்க பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் ஒரே நேரத்தில் வரிசைகளில் நுழைய ஆரம்பித்தனர். இதனால் திருப்பதியில் உள்ள ஸ்ரீனிவாசம் விடுதி, எம்ஆர் பல்லி அரசு பள்ளி, பூதேவி காம்ப்ளக்ஸ், ராமசந்திரா புஷ்கரணி ஆகிய 4 இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக மூச்சு திணறி 4 பேர் உயிரிழந்தனர். 41 பேர் காயமடைந்தனர். இவர்களை திருப்பதி அரசு மருத்துவமனையிலும், திருப்பதி தேவஸ்தான சிம்ஸ் மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் இருவர் உயிரிழந்தனர். நெரிசலில் 3 ஆண்கள், 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் தமிழ்நாட்டின் சேலத்தை சேர்ந்த மல்லிகா என்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, நேற்று தனி விமானம் மூலம் திருப்பதிக்கு வந்தார். அவர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் சந்திரபாபு கூறியதாவது: திருப்பதியில் 8 இடங்களில் பக்தர்களுக்கு இலவச டோக்கன் வழங்க திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள் என்பது குறித்து அவர்கள் கவனம் செலுத்தவில்லை. அனைத்து பக்தர்களையும் காக்க வைத்து ஒரே நேரத்தில் கேட்டுகளை திறந்ததால் பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு டோக்கன் வாங்கும் ஆர்வத்தில் சென்றுள்ளனர். அப்போது நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் என்னை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டு உள்ளேன். தவறிழைத்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு உறுதுணையாக நிற்கும். இறந்தவர் குடும்பத்துக்கு ஆந்திர அரசு சார்பில் தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். இனி இது போன்ற சம்பவம் நடக்கக் கூடாது என எச்சரிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.
அதிகாரிகளை கண்டித்த பவன்: ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் விஜயவாடாவில் இருந்து விமானம் மூலம் நேற்று பிற்பகல் திருப்பதி வந்தார்.
பின்னர் அவர் பக்தர்கள் உயிரிழந்த இடத்தை பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த அரசு அதிகாரியிடம் சரமாரியான கேள்விகளை பவன் கல்யாண் கேட்டார். ‘‘இவ்வளவு பக்தர்கள் வந்திருப்பதை கண்டும் அவர்களை ஏன் ஒரே நேரத்தில் டோக்கன் பெற வரிசையில் அனுமதித்தீர்கள்? இதனால்தான் தள்ளுமுள்ளு ஏற்பட்டு நெரிசலில் 6 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்’’ என்று கடுமையாக கண்டித்தார்.
திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளின் அலட்சியப் போக்கையும், பாதுகாப்பு குறைபாடுகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ரோஜா கண்டனம்: ஆந்திர முன்னாள் அமைச்சர் ரோஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஹைதராபாத்தில் புஷ்பா-2 திரைப்பட சிறப்பு காட்சியின் போது திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஒரு பெண் உயிரிழந்தார். இது தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆனால், திருப்பதியில் நெரிசலில் சிக்கி 6 பேர் இறந்த சம்பவத்தை விபத்து என்றும் தற்செயலாக நடந்தது என்றும் ஆந்திர போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதல், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர், தேவஸ்தான நிர்வாக அதிகாரி, எஸ்.பி., மாவட்ட ஆட்சியர் வரை அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு ரோஜா கூறினார்.