திருப்பதி: “ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பும், திருப்பதியில் விஐபிகள் மீதான கவனத்தை வளர்ப்பதன் மூலம் சாமானிய பக்தர்களை புறக்கணிக்கும் போக்கு தொடர்கிறது.” என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளை ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வைகுண்ட துவார தரிசனம் டோக்கன் விநியோகத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு விபத்து நடந்த பைராகிபட்டா என்ற இடத்துக்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவருடன் திருப்பதி எம்எல்ஏ அரணி ஸ்ரீனிவாசலு, இணை ஆட்சியர் சுபம் பன்சால், காவல் கண்காணிப்பாளர் (சித்தூர்) மணிகண்ட சந்தோலு, துணை காவல் கண்காணிப்பாளர் செஞ்சு பாபு ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது டோக்கன் விநியோகத்தின் போது மக்கள் இடைவெளியில்லாமல் நிறுத்தப்பட்டிருந்தது குறித்து வேதனை தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “சாமானிய மக்களின் நடைமுறைகளை கையாளுவதற்கான வழிமுறை இது இல்லை. திருமலை திருப்பதி வேவஸ்தானம் அதன் விஐபிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அணுகுமுறையை கைவிட்டுவிட்டு, சாமானிய பக்தர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும், இதனை தேவஸ்தானத்தின் தலைவருக்கு நான் வேண்டுகோளாக விடுக்கிறேன்.” என்றார்.
அதேபோல், கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் குறைவான ஒளி, டோக்கன் விநியோகத்துக்கு ஒற்றைப்படை நேரங்களைக் கடைபிடித்தல், எஸ்ஒபி எனப்படும் நிலையான இயக்க விதிகளைக் கடைபிடிக்காதது குறித்து துணை முதல்வர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
முன்னதாக, வியாழக்கிழமை அதிகாலை 5 மணி முதல் திருப்பதியில் 8 இடங்கள், திருமலையில் ஒரு இடத்தில் இலவச தரிசன டோக்கன்களை பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இலவச டோக்கன் பெறுவதற்காக திருப்பதியில் ஏற்பாடு செய்திருந்த 8 இடங்களிலும் புதன்கிழமை காலை முதலே பக்தர்கள் குவியத் தொடங்கினர். பாதுகாப்புக்கும் 3,000 போலீஸார் போடப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் புதன்கிழமை இரவு சுமார் 9.30 மணியளவில் டோக்கன் வாங்க பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் ஒரே நேரத்தில் வரிசைகளில் நுழைய ஆரம்பித்தனர். இதனால் திருப்பதியில் உள்ள ஸ்ரீனிவாசம் விடுதி, எம்ஆர் அரசு பள்ளி, பூதேவி காம்ப்ளக்ஸ், ராமசந்திரா புஷ்கரணி ஆகிய 4 இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக மூச்சுத் திணறி 4 பேர் உயிரிழந்தனர். 41 பேர் காயமடைந்தனர்.
இவர்களை திருப்பதி அரசு மருத்துவமனையிலும், திருப்பதி தேவஸ்தான சிம்ஸ் மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் இருவர் உயிரிழந்தனர். நெரிசலில் 3 ஆண்கள், 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் தமிழ்நாட்டின் சேலத்தைச் சேர்ந்த மல்லிகா.