பெங்களூரு: கர்நாடக துணை முதல்வரும், நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான டி.கே. சிவகுமார் நேற்று முன்தினம் மாலை மத்திய அமைச்சர் சோமண்ணாவுடன் மேல் பத்ரா திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு, தென்பெண்ணை நதி படுகையில் கட்டப்பட உள்ள அணைக்கு தமிழக அரசு எதிர்ப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதித்தார்.
பின்னர் டி.கே. சிவகுமார் கூறியதாவது: தென்பெண்ணையாறு நீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு கடந்த 2ம் தேதி நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. கர்நாடக அரசு விரைவில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய உள்ளது.
இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு தமிழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறது. அதன் மூலமாக சுமுக தீர்வு காண விரும்புகிறது. இரு மாநில பிரதிநிதிகளும் சந்தித்து பேசுவதற்கான தேதி விரைவில் இறுதி செய்யப்படும்.
தென்பெண்ணையாற்றின் துணை நதியான மார்கண்டேய ஆற்றின் குறுக்கே அணை கட்ட தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இரு மாநிலங்களையும் அழைத்து அணை கட்டுவது குறித்து பேசுவதாக மத்திய அமைச்சர் சோமண்ணா கூறியுள்ளார். இந்த பிரச்சினைக்கு நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டால் காலதாமதமாகும் எனவும் அவர் கூறினார். எனவே பேச்சுவார்த்தையே சரியான தீர்வாக இருக்கும். இவ்வாறு சிவகுமார் கூறினார்.