ஆபாசப் பட நடிகைக்கு ரகசியமாக பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்ட டொனால்டு ட்ரம்ப் 34 குற்றச்சாட்டுகளில் இருந்தும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
டொனால்டு ட்ரம்ப் கடந்த 2016-ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டார். இந்த தேர்தலுக்கு முன்பு, ஸ்டோர்மி டேனியல்ஸ் என்ற ஆபாசப் பட நடிகையுடன் இருந்த தொடர்பை மறைப்பதற்காக அவருக்கு ட்ரம்ப் 1,30,000 டாலர்கள் வழங்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு மன்ஹாட்டன் நடுவர் மன்றத்தில் ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தண்டனை விவரங்களை வெளியிடுவதாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில் டொனால்டு ட்ரம்ப் நிபந்தனைகள் எதுவும் இன்றி சிறைத்தண்டனை, அபராதம் எதுவுமின்றியும் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளார். ட்ரம்ப் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட போதிலும், நீதிபதி ஜுவான் எம்.மெர்ச்சன் அவரை விடுவிப்பதாக அறிவித்திருப்பது கவனம் ஈர்த்துள்ளது.
வழக்கின் பின்னணி: டொனால்டு ட்ரம்ப் ரியல் எஸ்டேட் அதிபராக இருந்தபோது கடந்த 2006 ஜூலையில் நடந்த கோல்ஃப் போட்டியின்போது ஸ்டோர்மி டேனியல்ஸை சந்தித்தார். அப்போது ஸ்டோர்மிக்கு 27 வயது, ட்ரம்புக்கு 60 வயது. மேலும் ட்ரம்பின் மூன்றாவது மனைவி மெலனியாவுக்கு மகன் பரோன் பிறந்து 4 மாதம் ஆகியிருந்தது. ஸ்டோர்மி கடந்த 2018-ல் வெளியிட்ட தனது புத்தகத்தில் டிரம்ப் உடன் தனக்கு ஏற்பட்ட தொடர்பை விவரித்துள்ளார். ட்ரம்ப் உடன் உடல்ரீதியான தொடர்பு ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் இதை ட்ரம்ப் மறுத்துள்ளார். ஸ்டோர்மிக்கு பணம் தரப்பட்டதை கடந்த 2018 ஜனவரியில் ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ கட்டுரையாக வெளியிட்டது. இதுவே ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படையாக அமைந்தது.