புதுடெல்லி: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பினர் 3 இந்து இளைஞர்களை கடத்தி சென்று அவர்களை பிணைக்கைதிகளாக சிறைபிடித்து வைத்துள்ளனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் நேற்று கூறியதாவது: பஞ்சாப் மாகாணத்தின் ரஹிம் யர் கான் மாவட்டத்தில் உள்ள போங் பகுதியில் இந்த கடத்தல் சம்பவம் நடைபெற்றுள்ளது. ஷமன், ஷமீர், சஜ்ஜன் என்ற மூன்று இந்து இளைஞர்கள் சட்டவிரோத அமைப்பால் கடத்தி செல்லப்பட்டுள்ளனர். ஆயுதத்துடன் வந்த 5 பேர் துப்பாக்கி முனையில் இந்து இளைஞர்களை நதிக்கரையை ஒட்டிய பகுதியான கட்சாவுக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இவ்வாறு காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே தடைசெய்யப்பட்ட இயக்க தலைவர் ஆசிக் கொராய் போலீஸாருக்கு வெளியிட்ட வீடியோ செய்தியில். “ எனது குடும்ப உறுப்பினர்கள் 10 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இல்லையெனில், கடத்தி வைக்கப்பட்டுள்ள 3 இந்து இளைஞர்கள் கொல்லப்படுவார்கள். அதுமட்டுமின்றி பேலீஸார் மீதும் தாக்குதல் நடத்தப்படும்” என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
அந்த வீடியோவில் சங்கிலியால் கட்டப்பட்டு பிணைக் கைதிகளாக சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள இந்து இளைஞர்கள் தங்களை காப்பாற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உருக்கத்துடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.