புதுச்சேரியில் மதுபான விலை உயர்வு – அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு

புதுச்சேரி: பெஞ்சல் புயலுக்கு நிவாரணம் தந்ததால் கடும் நிதி நெருக்கடியில் புதுச்சேரி உள்ள நிலையில் மத்திய அரசு நிவாரணம் கிடைக்காததால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வைத் தொடர்ந்து மதுபானங்களின் விலையும் உயரவுள்ளது. இதுதொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு இன்று இரவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று இரவு சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள கேபினட் அறையில் கூடியது. அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், ஜெயக்குமார், திருமுருகன், சாய் சரவணன் குமார், தலைமைச் செயலாளர் சரத் சவுகான், அரசு செயலர்கள் பங்கேற்றனர்.

பெஞ்சல் புயலுக்கு ரேஷன் அட்டைதாரருக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் தந்ததால் ரூ.177 கோடி செலவாகி கடும் நிதி நெருக்கடியில் புதுச்சேரி உள்ளது. மத்திய அரசு நிவாரணம் கிடைப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பஸ் கட்டணம், பெட்ரோல், டீசல் விலையை அரசு உயர்த்தியுள்ளது. அதைத்தொடர்ந்து மதுபான உரிமக்கட்டணமும் உயர்த்துவது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுபற்றி மேலும் கூறுகையில் நிதி நெருக்கடியை சமாளிக்கவும், நிதித்துறை தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அத்துடன் புதிதாக மதுபானக்கடைகள் உரிமம் தருவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. வருவாய் அதிகரிப்பின் ஒரு பகுதியாக மதுபான விற்பனை நிலையங்களுக்கான கலால் வரி மற்றும் உரிமக் கட்டணத்தை உயர்த்த முடிவு எடுக்கப்பட்டது என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.