சென்னை: மும்பையின் அடல் சேது பாலம் போல், சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கலங்கரை விளக்கம் முதல் – நீலாங்கரை வரையில் கடல் மேல் பாலம் அமைக்கவும், திருவான்மியூர் முதல் அக்கரை வரை மேம்பாலம் அமைக்கவும் ஆய்வு நடைபெற்று வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, இலங்கை- இந்தியா இடையில் பாலம் அமைக்கப்படுமா? சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க நவி மும்பையில் மத்திய அரசின் நிதியில் கட்டப்பட்ட அடல் சேது பாலம் போல், தமிழகத்தில் பட்டினப்பாக்கம் முதல் மகாபலிபுரம் வரையில் கடல் மேல் பாலம் அமைக்கப்பட வேண்டும். அமெரிக்காவில் ஒரே இடத்தில் 37 அடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. அதே போல் வாகன நெருக்கடி உள்ள இடங்களில் அந்த நாடுகளின் வல்லுநர்களை அழைத்து ஆலோசனை பெற்று மேற்கொள்ளப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போர், சுற்றுச்சூழல் பாதிப்பு இவற்றால், இலங்கையுடன் இந்தியாவை இணைக்கும் பாலத்திட்டம் கனவுத்திட்டமாகவே இருந்து வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியா வந்த போது, தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை சுரங்கப்பாதை அமைக்கலாம் என்ற யோசனையை இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அத்திட்டத்துக்கு இலங்கை அரசு எதிர்ப்பு தெரிவித்ததால் கைவிடப்பட்டது.
இந்நிலையில், நான், நெடுஞ்சாலைத்துறை செயலர், தலைமை பொறியாளர் உள்ளிட்டோருடன் தனுஷ்கோடிக்கு சென்று அரிச்சல் முனையில் ஆய்வு செய்தோம். குறிப்பாக தனுஷ்கோடியில் இருந்து 23 கிமீ தொலைவில் உள்ள தலைமன்னாருக்கு பாலம் கட்டலாமா, கப்பல் விடலாமா என்று ஆய்வு செய்தோம். அதன்பின், 2023-ம் ஆண்டு இந்தியா வந்த இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவிடம் சாலை போக்குவரத்து பாலம், பைப்லைன் அமைக்கும் திட்டம் முன்மொழியப்பட்டது.
பாலம் அமைப்பது என்றால் இரு நாடுகள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், முதல்வரின் அறிவுரை பெற்று, மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் கடிதம் எழுதப்படும். மும்பையில் அடல் சேது பாலம் போன்று சென்னையில் பாலம் அமைக்கப்படுமா என்று கேட்டுள்ளார். கலங்கரை விளக்கம் முதல் நீலாங்கரை வரை 15 கிமீ தூரத்துக்கு கடல் மேல் பாலம் அமைக்க சாத்தியம் உள்ளதா என்பதை தொடர்ந்து ஆய்வு செய்யும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டுள்ளது.
கடல்சார் வாரியம் தமிழகத்தில் உள்ளது. வாரியத்தின் மூலம் சிறுதுறைமுகம் மேம்படுத்தப்படுகிறது. அடல் சேது பாலத்தை நானும் பார்த்திருக்கிறேன். அதன் விளைவாகத்தான், கலங்கரை விளக்கம் முதல் மாமல்லபுரம் நீண்டதூரம் இருப்பதால், கலங்கரை விளக்கம் முதல் நீலாங்கரை வரை முதல்கட்டமாக எடுக்கப்பட்டுள்ளது. திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய நிதியில் செய்வதா, தனியார் பங்களிப்பா அல்லது மாநில நிதியில் செய்வதா என்பது முதல்வரிடம் பேசி முடிவெடுக்கப்படும்.
தமிழக சாலை விரிவாக்கததுக்கு பல கடிதம் எழுதிய நிலையில் மத்திய அரசிடம் நிதி தருவதாக கூறப்பட்டு வருகிறது. மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போல், தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் வெளிநாடு வல்லுநர்களை அழைத்து பாலப்பணிகளை மேற்கொள்ள முடியும். ஆணையம் மூலம் தற்போது நெரிசல் மிக்க பகுதிகள் ஆய்வு செய்யப்படுகிறது.
ஆணையம் மூலம் அடுத்ததாக திருவான்மியூர் முதல் அக்கரை வரை 15 கிமீ தொலைவுக்கு ஆறுவழிச்சாலை பாலம் அமைக்க முடிவெடுத்துள்ளோம். அதற்கான ஆய்வு நடைபெறுகிறது. சென்னை மற்றும் பிற மாநகராட்சி பகுதிகளில் நெரிசல் மிக்க இடங்கள் ஆய்வு செய்து பாலம் அமைக்கப்படும். அதே போல், உறுப்பினர் பாலாஜி கேட்டுக் கொண்ட வகையில், மேடவாக்கம் -மாம்பாக்கம் சாலையில் இருவழிப்பாதை பகுதி மேம்படுத்தப்படுவதுடன், தேவைப்பட்டால், மாம்பாக்கம் சந்திப்பில் பாலம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.