24H கார் பந்தயத்திற்காக துபாயிலிருக்கிறார் நடிகர் அஜித்.
24H கார் பந்தயம் இன்றைய தினம் தொடங்கியிருக்கிறது. அஜித்தும் தன்னுடைய ரேஸிங் டீமுடன் பரபரப்பாகச் செயல்பட்டு வருகிறார். தற்போது துபாயில் தன்னுடைய ரேஸிங் பக்கம் குறித்து பேட்டியளித்திருக்கிறார் அஜித் . நீண்ட இடைவெளிக்குப் பின் அஜித் அளிக்கும் பேட்டி இது.
ரேஸிங் கரியரின் தொடக்கம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அஜித், “ சீக்கிரமாகவே என்னுடைய வாழ்க்கையில் மோட்டார் சைக்கிள் ரேஸிங் வந்துவிட்டது. சரியாக எனக்கு 18 வயது இருக்கும்போது ரேஸிங் செய்ய தொடங்கினேன். அதன் பிறகு வேலைகள் கொஞ்சம் வந்துவிட்டது. இருப்பினும், என்னுடைய 21-வது வயது வரை நான் ரேஸிங் செய்தேன். அதன் பிறகு 1993-ல் மீண்டும் என்னுடைய ரேஸிங் கரியர் தொடங்கியது. பிறகு சினிமாவுக்கு வந்துவிட்டேன். 2002-ல் மீண்டும் ரேஸிங் பக்கத்தைத் தொடங்குவோம் என முடிவு செய்தேன். என்னுடைய வயது அப்போது 32.
அப்போது மோட்டர் சைக்கிளிலில் அல்ல. ஃபோர் வீலரில் ரேஸிங் செய்ய தொடங்கினேன். அப்படிதான் என்னுடைய ரேஸிங் கரியர் தொடங்கியது. அப்போது இந்தியாவில் நடைபெற்ற ரேஸிங் சாம்பியன்ஸில் கலந்துகொண்டேன். 2003-ல், ஃபார்முலா BMW ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்குபெற்றேன். 2004-ல் பிரிட்டிஷ் பார்முலா 3-ல் பங்கேற்றேன்.
ஆனால், என்னுடைய கமிட்மென்ட்களால் 2004-ல் நடைபெற்ற சீசனை முழுவதுமாகத் தொடர முடியவில்லை. சினிமா, ரேஸிங் என்பது இரண்டு கப்பல்களையும் சமமாகப் பார்த்துக்கொள்வது போன்றதுதான். 2010-ல் அதிர்ஷ்டமாக ஐரோப்பிய ஃபார்முலா இரண்டாவது சீசனில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. பட வேலைகள் இருந்ததால் என்னால் சில ரேஸ்களில்தான் கலந்துகொள்ள முடிந்தது. ” என்றவர், “ ரேஸிங் சீசன் முடியும் வரை நான் வேற எந்தத் திரைப்படத்தையும் கமிட் செய்யப்போவதில்லை. ரேஸிங் சீசன் தொடங்குவதற்கு முன்பு படங்களில் நடிப்பேன். அதனால் யாரும் கவலைப்பட வேண்டாம். ” என்றார்.
“இதுபோன்ற ரேஸிங் களத்தை நான் முதலில் அனுபவிக்கவுள்ளேன். என்னுடைய அஜித்குமார் ரேஸிங் டீமை உருவாக்க முடிந்ததை எண்ணி அதிர்ஷ்டகரமாக உணர்கிறேன். ” எனக் கூறி முடித்துக் கொண்டார்.