AR Rahman: `க்ளாசிகல் தான் நிலைத்திருக்கும், அதனால்…' – அனிருத்துக்கு ரஹ்மான் கொடுத்த அட்வைஸ்!

இசைப்புயல், ஆஸ்கர் நாயகன் என புகழப்படும் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இசையமைப்பாளர் அனிருத்துக்கு சில அட்வைஸ்களை வழங்கியுள்ளார்.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிக்கும் திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

“அனிருத் இப்போது நல்ல இசையைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார். இவ்வளவவு பெரிய படங்களுக்கு இசையமைத்து ஹிட் கொடுக்கிறார். 10,000 இசையமைப்பாளர்கள் இருக்கும் இந்த காலத்தில் நிலைத்து நிற்பது திறமை இல்லாமல் நடக்காது. நான் அதை பாராட்டுகிறேன்” எனப் பேசினார் ரஹ்மான்.

மேலும், “பெரிய விஷயங்களை செய்துவிட்டு தலைவன் தலைவன்தான் தொண்டன் தொண்டன்தான் எனக் கூறுகிறார் என்றால் அதற்கென ஒரு பணிவு வேண்டும். உங்களுக்கு அதிக வெற்றிகள் குவிய கடவுள் ஆசீர்வதிக்கட்டும்” என்றார்.

முன்னதாக ஒரு விருது மேடையில் ‘தலைவன் தலைவன்தான் தொண்டன் தொண்டன்தான்’ என ரஹ்மான் குறித்து அனிருத் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரஹ்மான் உடன் அனிருத்

பின்னர் அனிருத்துக்கு ஆலோசனை வழங்கும் விதமாக, “நீங்கள் இன்னும் நிறைய க்ளாசிகல் மியூசிக் படிச்சு, க்ளாசிகல் பாடல்கள் உருவாக்கணும். ராகங்கள், கர்நாடக சங்கீதத்தில் பாடல்கள் உருவாக்கும்போது அது நீண்டகாலம் நிலைத்திருக்கும்.

இளம் தலைமுறையினர் அதைச் செய்யும்போதுதான், இளம் தலைமுறையினரை சென்றடையும்” என்றார் ரஹ்மான்.

அனிருத் தமிழ் சினிமாவைக் கடந்து ஜவான், தேவரா போன்ற படங்களில் இசையமைப்பதன் மூலம் பான்-இந்தியா இசையமைப்பாளராக உருவாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டின் முதல் படமாக காதலிக்க நேரமில்லை படத்துடன் ரொமான்டிக்காக தொடங்குகிறார் ரஹ்மான். வரும் 14ம் தேதி பொங்கல் விடுமுறையை ஒட்டி இந்த திரைப்படம் வெளியாகவிருக்கிறது.

ஏற்கெனவே என்னை இழுக்குதடி, லாவண்டர் நேரமே போன்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்களால் முணுமுணுக்கப்பட்டு வருகின்றன.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.