IND vs ENG: சேப்பாக்கத்தில் இந்தியா – இங்கிலாந்து டி20 போட்டி… டிக்கெட் எடுப்பது எப்படி?

IND vs ENG, Chennai Chepauk Match Ticket Sales: இந்திய அணியின் டெஸ்ட் சீசன் கடந்த செப்டம்பரில் வங்கதேச அணிக்கு எதிராக தொடங்கி, இந்த ஜனவரியின் தொடக்கத்தில் பார்டர் – கவாஸ்கர் தொடரின் சிட்னி டெஸ்ட் போட்டியோடு நிறைவடைந்தது எனலாம். இதை அடுத்து, இந்த மாதம் முதல் மார்ச் மாதம் ஐபிஎல் தொடர் தொடங்கும் வரை ஒருநாள் சீசன் தொடங்க உள்ளது எனலாம்.

பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்க இருப்பதால் இந்திய அணி ஒருநாள் தொடருக்கு தன்னை தயார்படுத்த உள்ளது. சாம்பியன்ஸ் டிராபியில் தனது அனைத்து போட்டிகளையும் இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. துபாய் சூழலுக்கு ஏற்ற நன்கு அதிரடி பேட்டிங் மற்றும் அனுபவ பந்துவீச்சு படையை அழைத்து செல்ல இந்திய அணி திட்டமிட்டு வருகிறது.

IND vs ENG: சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்…

அந்த வகையில் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இந்தியா – இங்கிலாந்து அணிகள் விளையாட இருக்கின்றன. இது இந்திய அணிக்கு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னான ஒரு பயிற்சி போல் இருக்கும் எனலாம்.

IND vs ENG: இந்திய அணி ஸ்குவாட் எப்போது அறிவிப்பு?

இங்கிலாந்து அணி, இந்திய சுற்றுப்பயணத்திற்கும், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் ஏற்கனவே தனது ஸ்குவாடை அறிவித்துவிட்ட நிலையில், இந்திய அணி இன்னும் ஓரிரு நாட்களில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான ஸ்குவாடை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியும் விரைவில் வெளியாகும் எனலாம்.

IND vs ENG: போட்டிகள் எப்போது?

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் 5 போட்டிகளும் கொல்கத்தா, சென்னை, ராஜ்கோட், புனே, மும்பை ஆகிய நகரங்களில் முறையே ஜன. 22, 25, 28, 31, பிப். 2 ஆகிய நாள்களில் நடைபெறுகிறது. டி20 போட்டிகள் இரவு 7.30 மணிக்கு தொடங்கும். அதேபோல், 3 போட்டிகளும் நாக்பூர், கட்டாக், அகமதாபாத் நகரில் முறையே வரும் பிப். 6, 9, 12 ஆகிய நாள்களில் நடக்கிறது. ஒருநாள் போட்டிகள் பகலிரவாக நடைபெறும்.

IND vs ENG: சென்னை போட்டி டிக்கெட் விற்பனை?

இந்நிலையில், நமது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

IND vs ENG: சென்னை போட்டிக்கு டிக்கெட் எடுப்பது எப்படி?

வரும் ஜன. 12ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிமுதல் ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1,500 முதல் ரூ.15 ஆயிரம் வரையிலான டிக்கெட்டுகள் விற்பனைக்கு வருகின்றன. Zomato நிறுவனத்தின் District செயலியில் டிக்கெட் விற்பனை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

IND vs ENG: டிக்கெட் விலை விவரம்

– C, D, E கீழ் பக்கம் – ரூ.1,500

– I, J, K கீழ் பக்கம் – ரூ.2,500

– I, J, K மேல் பக்கம் – ரூ.1,500

– KMK மேல்பக்கம் – ரூ.5,000

– C, D, E குளிர்சாதன வசதி கொண்ட ஹாஸ்பிட்டாலிட்டி பாக்ஸ் – ரூ. 10,000

– I, J வசதி கொண்ட ஹாஸ்பிட்டாலிட்டி பாக்ஸ் – ரூ. 12,000

– H வசதி கொண்ட ஹாஸ்பிட்டாலிட்டி பாக்ஸ் – ரூ. 15,000

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.