உம்ராங்சோ: அசாம் மாநிலம் திமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தினுள் ஏற்பட்ட திடீர் வெள்ள நீரில் சிக்கிக் கொண்டவர்களில் மேலும் ஒரு தொழிலாளியின் உடல் இன்று காலையில் மீட்கப்பட்டது.
இந்திய ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் தொழிலாளியின் உடலை 90 மீட்டர் ஆழத்தில் இருந்து மீட்டனர். முன்னதாக நேபாளத்தைச் சேர்ந்த ஒருவரின் உடல் மீட்கப்பட்ட மூன்று நாட்களுக்கு பின்னர் 2-வது தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட தொழிலாளி திமா ஹசாவ்வின் உம்ராங்சோ பகுதியிலுள்ள கலமதி கிராமத்தைச் சேர்ந்த 27 வயது லிஜென் மகர் என்று அடையாளம் காணப்பட்டது. இன்னும் 7 தொழிலாளர்கள் சுரங்கத்தினுள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் இந்திய கடற்படை உள்ளிட்ட பல அமைப்புகள் 5 நாட்களாக ஈடுபட்டுள்ளன.
சுரங்கத்தினுள் 30 மீட்டர் வரை நீர் மட்டம் இருந்தது. முதல் மூன்று நாட்களுக்கு இந்த நீர்மட்டம் நிலையானதாக இருந்தது. அருகில் உள்ள கைவிடப்பட்ட மூன்று சுரங்கங்களில் தண்ணீரை வெளியேற்றியதில் வெள்ளிக்கிழமை 7 மீட்டர் நீர் வெளியேற்றப்பட்டது. சுரங்கத்தினுள் இருந்து தண்ணீரை வெளியேற்ற பல நிறுவனங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 5 நீரிரைக்கும் இயந்திரங்களை அதிகாரிகள் பயன்படுத்தினர்.
முன்னதாக அசாமின் திமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள 300 அடி ஆழம் கொண்ட நிலக்கரி சுரங்கத்தில் (ஜன.6) திங்கள்கிழமை எதிர்பாராத விதமாக வெள்ளம் சூழ்ந்ததில் சுரங்கத்தினுள் இருந்தவர்கள் நீரினுள் சிக்கினர். அதில் 3 பேர் உயிரிழந்திருந்தனர். குறைந்தது 6 பேர் உள்ளே சிக்கி இருக்கலாம் என அச்சம் நிலவியது. இந்நிலையில் ஒருவர் சடலம் புதன்கிழமை காலை மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, “இந்தச் சுரங்கம் சட்டவிரோதமானது போல் தெரிகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.” என்று அசாம் முதல்வர் ஹேமந்த பிஸ்வா செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார்.