புதுடெல்லி: டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியில் புதிதாக சனாதன் சேவா சமிதி துவக்கப்பட்டுள்ளது. இதற்காக இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் பட்டியலில் பாஜகவிலிருந்து கட்சி மாறி வந்தவர்களுக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லி சட்டப்பேரவையின் 70 தொகுதிகளுக்கு அண்மையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்தலுக்கு சற்று முன்பாக ஆம் ஆத்மி கட்சியில் புதியதாக சனாதன் சேவா சமிதி எனும் பெயரில் ஒரு பிரிவு ஜன.8-ம் தேதி துவக்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சியில் டெல்லியின் பல முக்கிய துறவிகளான மடாதிபர்கள், அகாடாக்களின் மகாமண்டலேஷ்வர்கள், ஜெகத்குருக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்டு பேசிய டெல்லி முன்னாள் முதல்வர் கேஜ்ரிவால், “கோயில்களின் பண்டிதர்களும், பூசாரிகள் 24 மணி நேரமும் பணி செய்கிறார்கள். இவர்கள், கடவுள் மற்றும் மனிதர்களுக்கு இடையிலான பாலமாகச் செயல்படுகின்றனர்.இதுபோன்றவர்களுக்கு சேவை செய்ய ஆம் ஆத்மி கட்சி இந்தப் பிரிவைத் துவக்கித் தயாராவது எங்கள் பாக்கியம்.” எனத் தெரிவித்தார்.
இதே நிகழ்ச்சிக்கு பாஜகவின் கோயில் பாதுகாப்பு மற்றும் ஆன்மிகப் பிரிவின் முக்கிய தலைவர்களும் வந்திருந்தனர். இவர்கள், பாஜகவிலிருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியில் அதன் தேசிய ஒருங்கிணைப்பாளரான அர்விந்த் கேஜ்ரிவால் முன்னிலையில் கட்சியில் இணைவதற்காக வந்திருந்தனர்.
இவர்களில் விஜய் சர்மா, ஜிதேந்திர சர்மா, பிரஜேஷ் சர்மா, மணிஷ் குப்தா, துஷ்யந்த் சர்மா மற்றும் உதய்காந்த் ஜா ஆகியோர் இருந்தனர். பாஜகவின் இந்த முன்னாள் தலைவர்களையும் சேர்ந்த்து ஆம் ஆத்மி சனிக்கிழமை தனது சனாதன் சேவா சமிதிக்கு புதிய நிர்வாகிகள் அறிவித்துள்ளது.
இதன் டெல்லி மாநில செயல் தலைவராக ஜிதேந்திர சர்மா, துணைத் தலைவராக சர்தார் ராஜேந்தர்சிங், அமைப்பாளராக பிரஜேஷ் சர்மா, இணைச்செயலாளராக துஷ்யந்த சர்மா நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதே நிகழ்ச்சியில் கோயில் பூசாரி மற்றும் பண்டிதர்களுக்காக மாதம் ரூ.18,000 உதவித் தொகையும் ஆம் ஆத்மியின் கேஜ்ரிவால் அறிவித்திருந்தார்.
ஆம் ஆத்மியின் இந்த நடவடிக்கையை ஹைதராபாத் எம்.பி.,யும் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி விமர்சித்துள்ளார். அவர், ‘பாஜக, ஆத்மியின் இரண்டு கட்சிகளுக்குமே தாய் அமைப்பாக ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் உள்ளது. இந்த இரண்டு கட்சிகளுமே இந்துத்துவா கட்சிகள்’ எனத் தெரிவித்துள்ளார்.