இனி ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பில்லை… கேப்டனை மாற்றுமா சிஎஸ்கே?

India National Cricket Team: இந்திய அணிக்கு அடுத்த 2 மாதங்கள் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. கடந்தாண்டு டி20 உலகக் கோப்பை வென்றிருந்தாலும், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறாமல் போனது, இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. எனவே, பிப்ரவரியில் தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை எப்படியாவது வெல்ல வேண்டிய கட்டாயத்தில் ரோஹித் சர்மா – கம்பீர் கூட்டணி உள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அனைத்து போட்டிகளும் துபாயில் நடைபெறுகிறது. சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னர், இந்திய அணி, இங்கிலாந்துடன் சொந்த மண்ணில் 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக இந்திய அணி தயார் ஆவதற்கான ஒரு வாய்ப்பாக இருக்கும். பெரும்பாலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடும் வீரர்களே இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரிலும் இடம்பெறுவார்கள்.

IND vs ENG: வேகப்பந்து படை விவரம்

இங்கிலாந்து தொடருக்கான அணிகள் நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியிருக்க, யார் யாரை இந்திய அணி தனது ஒருநாள் ஸ்குவாடில் சேர்த்துக்கொள்ளும் என்பதும் கேள்வியாக இருக்கிறது. பந்துவீச்சை பார்த்தால் இங்கிலாந்து தொடர்களில் பும்ராவுக்கு முழுவதுமாக ஓய்வு வழங்கப்படும். சிராஜிற்கு டி20 தொடரில் ஓய்வு கிடைக்கும். இதனால், ஷமி ஒருநாள் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது உடற்தகுதியுடன் இருக்கிறார் எனவும் தெரிய வருகிறது.

பிளேயிங் லெவனில் ஹர்திக் பாண்டியா இருப்பதால் இரண்டு, மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் பெரும்பாலும் பிளேயிங் லெவனில் இருப்பார்கள். காயத்திற்கு அதிக வாய்ப்பிருப்பதால் பேக்அப்பாக ஓரிரு வேகப்பந்துவீச்சாளர்கள் 15 பேர் ஸ்குவாடில் இருப்பார்கள். இங்கிலாந்து தொடரை பொறுத்தவரை ஷமி, அர்ஷ்தீப், சிராஜ், பிரசித் கிருஷ்ணா அல்லது முகேஷ் குமார் ஆகியோர் இடம்பிடிப்பார்கள். சுழற்பந்துவீச்சில் குல்தீப் யாதவ் மட்டுமே இருப்பார் எனலாம்.

IND vs ENG: பேட்டிங் ஆர்டர் எப்படி இருக்கும்?

அதேநேரத்தில் பேட்டிங் ஆல்-ரவுண்டரில் ஹர்திக் பாண்டியாவுக்கு இடம் உறுதி. நிதிஷ் குமார் ரெட்டி பேக்அப்பாக வருவாரா என்ற கேள்வியும் எழுகிறது. ஜடேஜா, அக்சர் பட்டேல் இருவரும் ஸ்குவாடில் இடம்பெறுவதற்கும் வாய்ப்புள்ளது. டாப் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டிங்கை பொறுத்தவரை யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோர் இடம்பெறுவது உறுதி. சுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன் ஆகியோரில் யார் யார் இடம்பிடிப்பார்கள் என்பதும், உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியவர்களில் யாருக்கு இடம்கிடைக்கும் என்பதுதான் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தி உள்ளது.

IND vs ENG: ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இனி வாய்ப்பில்லை

ஒப்பனிங் வீரர்களுக்கு பேக்அப் வீரர் யாராக இருக்கப்போகிறார் என்பதும் பெரிய கேள்வியாக இருக்கிறது. சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட் இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய விஜய் ஹசாரே டிராபி தொடரின் நிலவரப்படி பார்த்தால் இந்திய அணி சுப்மான் கில்லைதான் பேக்அப் வீரராக அணியில் சேர்க்கும் என தெரிகிறது. விஜய் ஹசாரே டிராபி தொடரில் 5 இன்னிங்ஸ்களில் 182 ரன்களை ரன்களை அடித்துள்ளார். அதுவும் சர்வீசஸ் அணியுடன் 148 ரன்களை அடித்த அவர், மீதம் உள்ள நான்கு இன்னிங்ஸ்களில் 34 ரன்களையே அடித்துள்ளார்.

ருதுராஜ் கேப்டனாக இருக்கும் மகாராஷ்டிரா அணிக்கும், பஞ்சாப் அணிக்கும் இடையில் இன்று விஜய் ஹசாரே டிராபி தொடரின் காலிறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்களில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றம் அளித்துள்ளார். எனவே, இவருக்கு இந்திய அணி இடம்கிடைக்க 99% வாய்ப்பில்லை எனலாம்.

சிஎஸ்கே எடுக்கும் முக்கிய முடிவு?

டெஸ்டில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஓடிஐ அணியிலும் தற்போது வாய்ப்பில்லை. டி20 தொடரிலும் அவர் தொடர்ந்து சொதப்பி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த சையத் முஷ்டாக் டிராபி தொடரில் 5 இன்னிங்ஸ்களில் 123 ரன்களை அவர் அடித்திருந்தார். இப்படி மூன்று பார்மட்களிலும் ருதுராஜ் தொடர்ந்து சறுக்கி வருவதால், சிஎஸ்கே அணியும் இந்த முறை தனது கேப்டனை மாற்றுமா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.