தவறுகள் தவிர்க்க முடியாதவை. ஏனென்றால் நானும் ஒரு மனிதன்தானே. கடவுள் கிடையாது என்று பிரதமர் நரேந்திர மோடி பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
ஜெரோதா இணை நிறுவனர் நிகில் காமத் தொகுத்து வழங்கும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். பீப்பிள் பை டபிள்யூடிஎஃப் (People by WTF) என்ற தலைப்பில் நிகில் காமத் பாட்காஸ்ட் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அதில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டு பேசி வருகின்றனர். இதன் 6-வது எபிசோட் பீப்பிள் வித் தி பிரைம் மினிஸ்டர் நரேந்திர மோடி (People with The Prime Minister Narendra Modi) என்ற பெயரில் ஒளிபரப்பாக இருக்கிறது.
இந்நிலையில், நிகில் காமத் இந்த பாட்காஸ்டுக்கான டிரைலரை தன்னுடைய எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். விரைவில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட இருக்கும் நிலையில் 2 நிமிடம் 13 வினாடிகள் கொண்ட டிரைலர் முதல் கட்டமாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், நிகில் காமத்தின் பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார். அதில் வெளியான ஒரு பகுதியில், நிகில் காமத், ‘எனக்கு இந்தி சரளமாகப் பேசத் தெரியாது. என் இந்தியில் குறை இருந்தால் மன்னியுங்கள்’ என்று குறிப்பிட்டார்.
அதற்கு சிரித்துக்கொண்டே பேசிய பிரதமர் மோடி, “நானும் இந்தி மொழிப் பேசுபவன் கிடையாது. நமக்கு தெரிந்த இந்தியை வைத்து இப்படியே நிகழ்ச்சியைக் கொண்டு செல்வோம்” என்றார்.
நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பதாவது: நான் குஜராத் முதல்வராக இருந்தபோது ஒரு உரை நிகழ்த்தினேன். மக்கள் தவறு செய்கிறார்கள் என்று நான் பகிரங்கமாகக் கூறினேன். நானும் தவறு செய்கிறேன். தவறுகள் தவிர்க்க முடியாதவை. ஏனென்றால் நானும் ஒரு மனிதன்தானே. கடவுள் கிடையாது.
இந்தியா நடுநிலையான நாடல்ல எனப் பலமுறை கூறியுள்ளோம். நான் அதை மீண்டும் மீண்டும் சொல்கிறேன். நான் அமைதியின் பக்கம் இருக்கிறேன்.
எனக்கும், சீனப் பிரதமர் ஜி ஜின்பிங்குக்கும் இடையே ஒரு சிறப்புப் பிணைப்பு இருக்கிறது. சீனப் பயணியும், தத்துவஞானியுமான யுவான் சுவாங், குஜராத்தில் என்னுடைய கிராமத்தில் வசித்திருக்கிறார். இதுதொடர்பான திரைப்படம் தயாராகி வருவதாக நான் கேள்விப்பட்டு, சீன தூதரத்துக்கு ஒரு கடிதம் எழுதினேன். யுவான் சுவாங் குறித்த அந்தப் படத்தில் எங்களுடைய கிராமத்தின் பெயரும் இடம்பெறவேண்டும் என்று நான் வலியுறுத்தினேன்.
2014-ல் நான் பிரதமரானபோது, பல்வேறு உலக தலைவர்கள் என்னை அழைத்து வாழ்த்தினேன். அப்போது சீனப் பிரதமர் ஜீ ஜின்பிங்கும் என்னை அழைத்து வாழ்த்தினார். அப்போதுதான் அவர் குஜராத்திலுள்ள எங்கள் கிராமமான வத்நகருக்கு வர விரும்புவதாகத் தெரிவித்தார்.
அப்போதுதான் அவருக்கும், எனக்கும் சிறப்புப் பிணைப்பு இருப்பதை உணர்ந்தேன். இந்தியாவுக்கு யுவான்சுவாங் வந்தபோது நீண்ட காலம் எங்கள் கிராமத்தில் தங்கியிருந்தார் என்பதை ஜீ ஜின்பிங். இப்படித்தான் எனக்கும், அவருக்கும் இடையே பிணைப்பு உள்ளது.
சிறுவயதில் பள்ளியில் படிக்கும்போது தேர்வுகளில் போட்டி இருந்தால் நான் அதிலிருந்து தப்பித்து ஓடிவிடுவேன். இருந்தபோதும் எப்படியாவது தேர்வில் வெற்றி பெற்று விடுவேன். தேர்வுகளை விட, பல்வேறு விதமான போட்டிகளில்தான் நான் கவனம் செலுத்தினேன். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
இந்தி கற்றுக்கொண்டது எப்படி?- இந்தி மொழியைக் கற்றுக்கொண்டது எப்படி என்று பிரதமர் மோடி விளக்கியுள்ளார்.
நிகில் காமத் நடத்திய பாட்காட் நிகழ்ச்சியில் அவர் கூறும்போது, “நான் குஜராத்தை சேர்ந்தவன். எனக்கு குஜராத்திதான் தெரியும். அதன் பின்னர்தான் இந்தி கற்றுக்கொண்டேன். நான் குஜராத்திலுள்ள மெஹ்சானா ரயில் நிலையத்தில் தேநீர் விற்பனையாளராக வேலை பார்த்தேன். அப்போதுதான் இந்தி பேசவும், படிக்கவும் கற்றுக்கொண்டேன்.
அந்த ரயில் நிலையத்துக்கு உத்தர பிரதேசத்திலிருந்து ஏராளமான பால் வியாபாரிகள் வந்து செல்வர். நான் தேநீர் விற்கும் ரயில்வே பிளாட்பாரத்தில் 30 முதல் 40-க்கும் மேற்பட்ட பால் வியாபாரிகள் நின்று ரயில் ஏறிச் செல்வர். அவர்களுடன் அப்போது அடிக்கடி பேசுவேன். அப்படித்தான் இந்தி எனக்கு பரிச்சயமானது. இந்தி கற்றுக்கொண்டதும் அப்படித்தான்.
நான் குஜராத் முதல்வரான பின்னர் ஒரு நிகழ்ச்சியில் பேசினேன். அப்போது கடின உழைப்புக்காக அஞ்சமாட்டேன், எனக்காக எதையும் செய்துகொள்ள மாட்டேன் என்று சபதம் எடுத்துக்கொண்டேன்.
நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். ஆனால் அவர்கள் ஒரு குறிக்கோள், இலக்குடன் அரசியலுக்கு வரவேண்டும். அரசியலுக்கு வரவேண்டும் என்ற லட்சியத்துக்காக மட்டுமே வரக்கூடாது” என்றார்.