கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களின் எதிர்ப்பையும் மீறி, பக்தர்கள் கனகசபை மீது ஏறி வழிபட்டனர். நடராஜர் கோயிலில் இன்று ஆருத்ரா தரிசன தேர்த் திருவிழாவும், நாளை தரிசன விழாவும் நடைபெறுகிறது. இதையொட்டி, கடந்த 4-ம் தேதி கோயிலில் கொடியேற்றப்பட்டு, தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. பஞ்ச மூர்த்தி வீதி உலாவும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ‘கனகசபையில் வழிபட பக்தர்களை அனுமதித்தால் சிரமம் ஏற்படும்’ என்று கோயில் தீட்சிதர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். மேலும், கோயிலுக்குப் பாதுகாப்பு தருமாறும் அதில் குறிப்பிட்டிருந்தனர்.
இதற்கு தெய்வீக பக்தர்கள் பேரவையின் நிறுவனத் தலைவர் ஜெமினி ராதா என்பவர் எதிர்ப்புத் தெரிவித்தார். “கனக சபையில் ஆண்டாண்டு காலமாக பக்தர்கள் எந்த தடையுமின்றி வழிபட்டு வருகின்றனர். ஆருத்ரா தரிசன விழாவைக் காரணம் காட்டி அனுமதி மறுப்பது ஏற்கத்தக்கதல்ல” என்று குறிப்பிட்டிருந்தார். அனுமதி மறுத்தால், அனுமதியை மீறி கனகசபையில் ஏறுவோம் என்று தெய்வீக பக்தர்கள் பேரவையினர், காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.
இந்நிலையில், கடலூர் எஸ்.பி. ஜெயக்குமார், சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் மற்றும் போலீஸார் பாதுகாப்புடன், தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் ஜெமினி ராதா உள்ளிட்ட நிர்வாகிகள், பக்தர்கள் ஆகியோர் நேற்று கனகசபையின் மீது ஏறி தரிசனம் செய்தனர். இதனால் கோயில் வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
ஏற்கெனவே சிலமுறை கனகசபையில் ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதில் சர்ச்சை நிலவியதும், பின்னர் காவல்துறை அனுமதியுடன் பக்தர்கள் கனகசபையில் தரிசனம் மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.