புதுடெல்லி: பாஜக தனது தலைவர்கள் குடியிருக்கும் வீட்டு முகவரி உள்ள பகுதிகளில் இருந்து போலி வாக்காளர்களை சேர்ப்பதற்கு அதிக அளவில் விண்ணப்பித்து தேர்தல் ஆணையத்தை ஏமாற்ற முயற்சிக்கிறது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: பாஜக கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், அவர்கள் வசிக்கும் வீட்டு முகவரிகளில் இருந்து பல புதிய வாக்காளர்களுக்கான விண்ணப்பங்களை அளித்துள்ளனர். மத்திய அமைச்சர்கள், பாஜக எம்.பி.க்கள் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் தேர்தல் ஆணையத்தின் கண்களில் மண்ணைத் தூவி அதன் மாண்புடன் விளையாட நினைக்கிறார்கள்.
புதுடெல்லியின் பாஜக வேட்பாளரான பரவேஸ் வெர்மா, ஒரு முன்னாள் எம்.பி. தற்போது அவர் எம்.பி.யாக இல்லை. என்றாலும் அவர் மே முதல் ஜனவரி வரை 8 மாதங்களாக எம்.பி., பங்களாவை காலி செய்யவில்லை. இது மட்டும் இல்லாமல் அந்த பங்களாவின் முகவரியில் இருந்து 33 புதிய வாக்காளர்கள் பெயர்களை இணைக்க விண்ணப்பித்துள்ளார். இரண்டாவதாக, மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, அவரது வீட்டு முகவரியின் பெயரில் புதிதாக 26 வாக்காளர்களின் பெயர்களை இணைக்க விண்ணப்பித்துள்ளார். மத்திய இணையமைச்சர் கமலேஷ் பாஸ்வான், அவரது வீட்டு முகவரியில் இருந்து 26 வாக்காளர்களின் பெயர்களை இணைக்க விண்ணப்பித்துள்ளார்.
புதுடெல்லியில் தேர்தல் ஆணையத்தின் கண்ணை மறைத்து நடத்தும் நாட்டின் மிகப் பெரிய தேர்தல் முறைகேடு இது. உண்மையில் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இதுகுறித்தும் தேர்தல் ஆணையம் கவனிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், “இந்தியாவின் மிகப் பெரிய அரசியல் கட்சியாக சொல்லப்படும் பாஜக, அரவிந்த் கேஜ்ரிவாலின் கழிப்பறைக்கு பின்னே சிக்கி நிற்கிறது” என்று டெல்லி முதல்வர் பங்களாவில் தங்க முலாம் பூசப்பட்ட கழிப்பறை, நீச்சல் குளம் இருப்பதாக சொல்லும் பாஜகவின் குற்றச்சாட்டினை கேலி செய்தார்.
டெல்லியின் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் 8-ம் தேதி எண்ணப்பட இருக்கின்றன.