தண்ணீர் பற்றாக்குறை, மின்சாரம் துண்டிப்பால் லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீயை அணைப்பதில் சிக்கல்

லாஸ்ஏஞ்சல்ஸ்: தண்ணீர் பற்றாக்குறை, மின்சாரம் துண்டிப்பு ஆகிய பிரச்னைகளும், லாஸ்ஏஞ்சல்ஸ் காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியாமல்போனதற்கு காரணம் என தீயைணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் கடந்த 8 மாதங்களாக வறட்சி நிலவியது. இந்நிலையில் இங்குள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பாலிசேட்ஸ் பகுதியில் கடந்த 7-ம் தேதி ஏற்பட்ட காட்டுத் தீ ஏற்பட்டது. அப்போது மணிக்கு 100 மைல் வேகத்தில் சூறாவளிக் காற்றும் வீசியது. இதனால் காட்டுத் தீ 4 நாட்களில் மளமளவென பரவி 40,000 ஏக்கர் அளவுக்கு பரவியது. தண்ணீர் மற்றும் ரசாயனங்களை எடுத்துச் சென்ற தீயணைப்பு விமானங்களும், சூறாவளி காற்றின் காரணமாக காட்டுத் தீ பரவிய பகுதிக்குள் செல்ல முடியவில்லை.

தீயணைப்புத் துறையின் 7,500 வீரர்கள் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இவர்கள் உள்ளூர்களில் அமைக்கப்பட்ட தண்ணீர் குழாய்களில் இருந்து அளவுக்கு அதிகமான தண்ணீரை, நீண்ட நேரம் பயன்படுத்தி காட்டுத் தீயை அணைக்க முயன்றனர். இவர்களால் ஓரளவுக்குத்தான் காட்டுத் தீயை அணைக்க முடிந்தது. அதற்குள் தண்ணீர் குழாய்களில் அழுத்தம் குறைந்ததால், தீயை அணைப்பதற்கு தேவையான தண்ணீர் தீயணைப்பு வீரர்களுக்கு கிடைக்க வில்லை. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் கடல் மட்டத்தில் இருந்து 1,500 அடி உயரத்தில் உள்ளது. இங்குள்ள உயரமான பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் மூலமாகவே தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

அல்டாடெனா மற்றும் பசாடெனா மற்றும் ஈட்டன் போன்ற பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் இருப்பு குறைந்ததால், தீயணைப்பு வீரர்களுக்கு உள்ளுர் தண்ணீர் குழாய்கள் மற்றும் தீயணைப்புக்கு பயன்படுத்தப்படும் குழாய்களில் தண்ணீர் அழுத்தம் குறைந்தது. மேலும் காட்டுத் தீ ஏற்பட்டவுடன், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தீயணைப்பு பணியில் ஈடுபடும் வீரர்கள் மின்சார கம்பிகளில் சிக்கி விடுவர் என்பதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதன் காரணமாக தண்ணீர் தொட்டிகள் இருந்த இடத்தில் மின் மோட்டார்களை இயக்க மின்சாரம் இல்லை. இதனால் இக்கட்டான சூழ்நிலைக்கு தீயணைப்பு வீரர்கள் தள்ளப்பட்டனர். இதனால் அவர்கள் நீச்சல் குளங்கள் மற்றும் கடல் நீரை பயன்படுத்தி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். டேங்கர் லாரிகள் மூலம் அனுப்பப்பட்ட தண்ணீரை பயன்படுத்தி காட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். அந்த தண்ணீர் காட்டுத் தீயை அணைக்கும் அளவுக்கு போதுமானதாக இல்லை. லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நிலவிய தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினையும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியாமல் போனதற்கு காரணம் என கூறப்படுகிறது. இதனால் இப்பகுதிகளில் 5,000-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தீயில் எரிந்து நாசாமாயின.

இங்கு தண்ணீர் விநியோகம் பாதித்தது குறித்து விசாரணை நடத் த கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம் உத்தரவிட்டுள்ளார். தீயணைப்புத் துறைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதும், இது போன்ற சூழ்நிலைக்கு காரணம் என பொது மக்கள் கூறுவதால், லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரன் பாஸ் உள்ளிட்ட உள்ளூர் தலைவர்கள் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளனர்.

காட்டுத் தீ போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு தண்ணீர் சேமிப்பு திறன், தண்ணீர் விநியோக குழாய்களை மேம்படுத்துவது, தண்ணீர் மோட்டார்களுக்கு தடையற்ற மின் இணைப்பு உட்பட பல யுக்திகளை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்டது போன்ற பிரம்மாண்ட காட்டுத் தீ சம்பவத்தை, உலகில் உள்ள எந்த சிறந்த தண்ணீர் விநியோக அமைப்பாலும், கட்டுப்படுத்த முடியாது எனவும் ஒரு சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.