புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து மாஹே சென்ற பேருந்தினை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் திடீரென தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட போதும் பேருந்தை பாதுகாப்பாக சாலையோரம் நிறுத்தி பயணிகள் உயிரை காத்தது பாராட்டு பெற்றுள்ளது. அதேபோல், ஓட்டுநரின் சிகிச்சைக்காக தனது பயணத்தை ரத்து செய்து அவருடன் மருத்துவமனையில் தங்கியிருந்த பயணியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை மாஹேவுக்கு பிஆர்டிசி பேருந்து 49 பயணிகளுடன் சென்றது. பேருந்தை ஆறுமுகம் ஓட்டிச் சென்றார். இன்று (சனிக்கிழமை) அதிகாலை மலப்புரம் அருகே பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநர் ஆறுமுகத்துக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக ஓட்டுநர் பயணிகளின் உயிரை கருத்தில் கொண்டு, பேருந்தை சாலையோரமாக நிறுத்தினார். இதனால் பயணிகள் எந்த பாதிப்பும் இன்றி தப்பினர். மாற்று ஓட்டுநர் குணசேகரன், நடத்துநர் ஞானவேல் ஆகியோர் மலப்புரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஓட்டுநர் ஆறுமுகத்தை சேர்த்தனர்.
அங்கு ஓட்டுநர் ஆறுமுகத்துக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. மாற்று ஓட்டுநர் பயணிகளை மாஹே அழைத்து சென்றார். தகவலறிந்த பிஆர்டிசி உதவி மேலாளர் குழந்தைவேல், மேலாண் இயக்குநர் சிவக்குமாருக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து, உடனடியாக ஆறுமுகத்தின் சிகிச்சைக்கு தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு சிவக்குமார் உத்தரவிட்டார். உடனே குழந்தைவேல், மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்புகொண்டு உரிய சிகிச்சை அளிக்கும்படியும், சிகிச்சைக்கான தொகையை அனுப்புவதாகவும் தெரிவித்தார். அதனை ஏற்றுக்கொண்ட மருத்துவமனை நிர்வாகம் ஓட்டுநர் ஆறுமுகத்துக்கு சிகிச்சை அளித்தது.
பேருந்தில் நெய்வேலியில் இருந்து கோழிக்கோடு செல்லவதற்காக பயணம் செய்த தேவதாஸ் என்பவர் ஓட்டுநர் ஆறுமுகத்துக்கு உதவியாக தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு மருத்துவமனையில் தங்கி உதவியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.