சென்னை: திரைப்பட பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் ஆர்.என்.ரவி: பாடகர் பி.ஜெயச்சந்திரனின் மறைவு, இசை உலகில் ஓர் ஆழமான வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குரல் அதன் ஆழம் மற்றும் உணர்ச்சியால் இதயங்களைத் தொட்டு பல்வேறு மொழிகள் மற்றும் கலாசாரங்களைக் கடந்து ஒலித்தது. ஒவ்வொரு மெட்டுக்கும் உயிர்க் கொடுத்து பாடலைக் கேட்ட எண்ணற்றோருடன் அவர் நீடித்த தொடர்பை உருவாக்கினார். அவரது காலத்தால் அழியாத பாடல்கள் பல தலைமுறைகளைக் கடந்து எதிரொலிக்கும். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: கடந்த 60 ஆண்டுகாலமாக ரசிகர்களைத் தமது காந்தக் குரலால் கட்டிப்போட்ட புகழ்பெற்ற பின்னணி பாடகர் பி. ஜெயச்சந்திரன் காலமானார் என்கிற செய்தி அறிந்து வேதனையடைந்தேன்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: தமிழில் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் மக்களின் கவனத்தை ஈர்த்து, இன்றும் செல்வாக்கு செலுத்தி வருகின்றன. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் ஆறுதல் தெரிவிக்கிறோம்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: மலையாளத்திலிருந்து வந்து தெற்கு மாநிலங்களை நிரப்பிய மணிக்குரலுக்குச் சொந்தக்காரரான ஜெயச்சந்திரன் மறைந்து விட்டார் என்னும் செய்தி மனதை வருத்துகிறது. பாடிய பாடல்களில் எல்லாம் வெற்றிகண்டு காட்டியவர். இசையாக என்றும் நம் மனங்களில் இருப்பார். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.