மும்பை: மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் சிவசேனா (UBT) தனியாக போட்டியிடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத், “இண்டியா கூட்டணி மற்றும் மகா விகாஸ் அகாடி கூட்டணிகள் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கானவை. கூட்டணியில் இணைந்து போட்டியிடும்போது, தனிப்பட்ட கட்சிகளின் தொண்டர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காது. இது கட்சியின் வளர்ச்சியைத் தடுக்கிறது. எனவே, மும்பை, தானே, நாக்பூர் மற்றும் பிற நகராட்சிகள், மாவட்ட உள்ளாட்சிகள், கிராம பஞ்சாயத்துகள் ஆகியவற்றில் எங்கள் பலத்தின் அடிப்படையில் நாங்கள் போட்டியிடுவோம். இதற்கான ஆதரவை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே அளித்துள்ளார்” என தெரிவித்தார்.
மாநில சட்டமன்ற தேர்தலில் மகா விகாஸ் அகாதி கூட்டணி தோல்வியடைந்ததை அடுத்து, கூட்டணி கட்சிகளை காங்கிரஸ் தலைவர் விஜய் வடெட்டிவார் விமர்சித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சஞ்சய் ராவத், ஒருமித்த கருத்தை எட்டுவதிலும், சமரசத்திலும் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கூட்டணியில் இருக்க உரிமை இல்லை என்று கூறினார்.
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இண்டியா கூட்டணி ஒரு கூட்டத்தையும் நடத்தவில்லை என்றும் சஞ்சய் ராவத் குற்றம் சாட்டினார். “இண்டியா கூட்டணிக்கு ஒரு ஒருங்கிணைப்பாளரைக் கூட நியமிக்க முடியவில்லை. அது நல்லதல்ல. கூட்டணியின் மிகப்பெரிய கட்சியாக, கூட்டத்தைக் கூட்டுவது காங்கிரஸின் பொறுப்பு.” என்று சஞ்சய் ராவத் கூறினார்.
விவசாயக் கடன் தள்ளுபடி பற்றி தான் ஒருபோதும் வாக்குறுதி அளிக்கவில்லை என துணை முதல்வர் அஜித் பவார் கூறி இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ராவத், “அவர் அதைப் பற்றிப் பேசவில்லை என்றாலும், விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் பெண்களுக்கு மாதம்தோறும் ₹ 2,100 ஆகியவை வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு வாக்குறுதிகளும் செயல்படுத்தப்பட வேண்டும். அவர் பாஜக அரசாங்கத்தில் நிதியமைச்சர். எனவே, அவர் அதைச் செய்ய வேண்டும்.” எனக் குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது முதல் பாட்காஸ்ட் பேட்டியின் போது தான் ஒரு மனிதர் என்றும் தவறுகள் செய்யக்கூடியவர் என்றும் கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சஞ்சய் ராவத், “அவர் [மோடி] கடவுள். நான் அவரை ஒரு மனிதராகக் கருதவில்லை. கடவுள்தான் கடவுள். அவரை கடவுளின் அவதாரம் என்று மற்றவர்கள் அறிவித்துள்ளபோது அவர் எப்படி மனிதராக இருக்க முடியும்? அவர் விஷ்ணுவின் 13வது அவதாரம். கடவுளாகக் கருதப்பட்ட ஒருவர் தன்னை மனிதன் என்று சொன்னால், ஏதோ தவறு இருக்கிறது.” என்று தெரிவித்தார்.