மெட்டாவின் கொள்கை மாற்ற விவகாரம்; 72 மணிநேர காலக்கெடு விதித்த பிரேசில்

பிரேசிலியா,

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட வலைதளங்களை இயக்கி வரும் சமூக ஊடகங்களில் ஒன்றான மெட்டா நிறுவனம் சமீபத்தில் அதன் கொள்கையில் சில மாற்றங்கள் பற்றிய விவரங்களை வெளியிட்டது. இதுவரை மரபாக கடைப்பிடித்து வந்த உண்மை கண்டறியும் நடைமுறையில் இந்த மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன.

இதன்படி, தகவல்களை சரிபார்க்கும் திட்ட கொள்கை கைவிடப்படும் என்ற முடிவு அறிவிக்கப்பட்டது. இதனால், அதன் தளங்களில் வெறுப்பு பேச்சு மற்றும் தவறான தகவல் பரிவர்த்தனை பற்றிய விசயங்களில் இதுவரை கடைப்பிடிக்கப்பட்ட மரபுகள் கைவிடப்படுகின்றன என தெரிகிறது.

இந்த சூழலில், உண்மை கண்டறியும் நடைமுறையில் மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த கொள்கைகள் கைவிடப்படுவது பற்றி விளக்கம் அளிக்கும்படி கோரி மெட்டா நிறுவனத்திற்கு பிரேசில் அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்காக 72 மணிநேர காலக்கெடுவும் விதித்துள்ளது.

இதுபற்றிய அறிவிப்பில், குழந்தைகள் மற்றும் முதியவர்கள், ஆபத்து சூழலிலுள்ள பாதுகாப்பற்ற மக்கள் மற்றும் வணிக சூழலை பாதுகாக்க கடுமையான சட்ட நடைமுறையை பிரேசில் கொண்டுள்ளது. டிஜிட்டல் படுகொலை மற்றும் காட்டுமிராண்டித்தனம் ஆகியவற்றால் இந்த சூழலை மாற்ற நாங்கள் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்து உள்ளது.

இதேபோன்று, பிரேசில் நிதி மந்திரி பெர்னாண்டோ ஹத்தட்டின் ஏ.ஐ. வீடியோ ஒன்றை நீக்கும்படியும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த காலங்களில், டிக்டாக் மற்றும் எக்ஸ் போன்ற வலைதளங்களுக்கு எதிராக தற்காலிக சேவை முடக்கம் என்ற சட்ட ரீதியிலான நடைமுறையை பிரேசில் எடுத்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.