மெட்ராஸ்காரன் விமர்சனம்: தமிழில் ஷேன் நிகாம்; ஒன்லைன் ஓகே, இருந்தும் படம் சிக்கலில் தவிப்பது ஏன்?

சென்னையில் வசிக்கும் சத்தியமூர்த்தி (ஷேன் நிகாம்), தன் காதலி மீராவை (நிஹாரிகா) திருமணம் செய்ய, தன் சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு வருகிறார். திருமணத்துக்கு முந்தைய நாள் காரில் பயணம் செய்யும்போது ஏற்படும் ஒரு விபத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் (ஐஸ்வர்யா தத்தா) பாதிக்கப்படுகிறார். ஏற்கெனவே சத்தியமூர்த்தியுடன் ஒரு முன் பகையுடன் திரியும் துரை சிங்கம்தான் (கலையரசன்) அந்தக் கர்ப்பிணிப் பெண்ணின் கணவர் என்பது தெரியவர, அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால் அனைவரின் வாழ்க்கையும் எப்படி மாறுகிறது என்பதே இந்த `மெட்ராஸ்காரன்’.

விரும்பிய பெண்ணை மணக்கப் போகிற ஆர்வம், உறவுகளின் மீது பாசம் எனத் துடிப்பான இளைஞராக ‘கும்பலங்கி நைட்ஸ்’ புகழ் ஷேன் நிகாம் தமிழில் தடம் பதித்துள்ளார். உணர்வுபூர்வமான காட்சிகளில், குறிப்பாகக் குற்றவுணர்ச்சியோடு வருந்தும் இடத்தில் செம்மையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தமிழில் தானே டப்பிங் பேச வேண்டும் என்று முயன்றாலும், அவரது மலையாளம் கலந்த உச்சரிப்பு புதுக்கோட்டைக்காரர் என்பதற்கான உணர்வினைக் கொடுக்கவில்லை. இது கதாபாத்திரத்தோடு நம்மை ஒன்றவிடாமல் அந்நியப்படுத்துகிறது.

மெட்ராஸ்காரன் படத்தில்...
மெட்ராஸ்காரன் படத்தில்…

ஊரில் பஞ்சாயத்து செய்யும் முரட்டுக் குணம், காதல் மனைவியின் நிலையைக் கண்டு வருந்துகிற இடம் ஆகியவற்றில் சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார் கலையரசன். நாயகி நிஹாரிகா பாடலுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளார். மற்றபடி அவருக்கும் நாயகனுக்குமான கெமிஸ்ட்ரி சுத்தமாக மிஸ்ஸிங்! மற்றொரு நாயகியாக வரும் ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் குறையேதுமில்லை. தாய்மாமாவாக கருணாஸ் தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்துக்கு நியாயம் சேர்த்துள்ளார். கீதா கைலாசம், தீபா ஆகியோர் ஓவர் ஆக்டிங்கில் ‘உனக்கும் எனக்கும்தான் போட்டியே’ என்று நம் பொறுமையைச் சோதித்தார்கள்.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையில் தொடக்கத்தில் வரும் கல்யாணப் பாடல் ஓகே ரகம். ஏன், எதற்கு என்று காரண காரியமில்லாமல் ஒலிக்கும் பின்னணி இசை ஆங்காங்கே பரபரப்பையும் கூட்டவே செய்கிறது. ‘காதல் சடுகுடு’ ரீமிக்ஸ் பாடல் இந்தப் படத்துக்குத் தேவையில்லாத ஆணியே! கல்யாண பரபரப்பை ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ். குமார் கச்சிதமான கோணங்களால் கடத்தியிருக்கிறார். இரவு நேரக் காட்சிகளுக்கும், ஆக்ஷன் காட்சிகளுக்கும் தேவையான உழைப்பைக் கொடுத்திருக்கிறது. முதல் பாதியில் எந்த உணர்வும் முழுமையாகக் கடத்தப்படாமல் வேகமாகச் செல்லும் காட்சிகளுக்குப் படத்தொகுப்பாளர் ஆர்.வசந்தகுமார் சற்றே நிதானத்தைக் கூட்டியிருக்கலாம். இரண்டாம் பாதியின் நீளத்தையும் இன்னும் குறைத்திருக்கலாம்.

மெட்ராஸ்காரன் படத்தில்...
மெட்ராஸ்காரன் படத்தில்…

படம் ஆரம்பித்த உடனேயே நாயகனின் காதல், குடும்பத்தினரிடம் இருக்கும் அன்பு என்று ஒவ்வொரு நிகழ்வையும் எடுத்துச் சொல்வது உணர்ச்சிகரமாக இல்லாமல் ஒப்பிப்பது போலவே இருப்பது நெருடல்! இதனால் நாயகனின் அடுத்தடுத்த துன்பங்கள் வேண்டிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதே நேரத்தில் நாயகியும் நாயகனின் நிலையைப் புரிந்து கொள்ளாமல் சலித்துக் கொண்டே குறை சொல்வது அந்த இடைவெளியை மேலும் அதிகரிக்கிறது. அதேபோல சிங்கத்தின் கதையிலும் அவர் மனைவி கல்யாணியுடனான பிணைப்பைச் சரியாகச் சொல்லவில்லை.

இடைவேளைக்குப் பிறகு படத்தில் ஏதோ மர்மம் இருப்பது போலப் பல முடிச்சுகளைக் கட்டவிழ்க்கிறார் இயக்குநர் வாலி மோகன்தாஸ். ஆனால் அது சுவாரஸ்யமாக மாறாமல் படத்தைத் திக்கற்று அலைய வைத்திருக்கிறது. அதிலும் க்ளைமாக்ஸ் காட்சி, எந்தவித ஆச்சரியத்தையும் ஏற்படுத்தாமல் நம்பகத்தன்மை இல்லாமல் முடிவது ஏற்புடையது அல்ல. நல்லதொரு கதையை வைத்துக் கொண்டு அதைப் படமாக மாற்றுவதில் சற்றே ஏமாற்றம் அளிக்கிறது திரைக்கதை. டென்ஷன் பில்டப் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இரண்டாம் பாதியின் அந்த ரயில்வே கேட் காட்சியில் யாருமே மொபைல் போன் பயன்படுத்தாமல் இருப்பது போங்காட்டமே! குற்றவுணர்வு, செய்யாத தப்புக்கான தண்டனை போன்ற ஏரியாக்களைத் தத்துவ ரீதியாக அணுகும் வாய்ப்பிருந்தும் அங்கே முழுமையாகச் செல்லாமல் ஏமாற்றமளிக்கிறது படம்.

மெட்ராஸ்காரன் படத்தில்...
மெட்ராஸ்காரன் படத்தில்…

கதையம்சமாக நல்ல ஒன்லைனை வைத்துக்கொண்டு அதைக் குழப்பமான திரைக்கதையால் சொல்லியிருக்கும் இந்த `மெட்ராஸ்காரன்’, புதுக்கோட்டையிலிருந்து மெட்ராஸுக்கு நடந்தே வந்த உணர்வைத் தருகிறான்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.