மைசூரு இன்போசிஸ் வளாகத்தில் புகுந்த சிறுத்தை! – இணையத்தை கலக்கும் மீம்ஸ்

மைசூரு: மைசூருவில் உள்ள இன்போசிஸ் வளாகத்தில் சிறுத்தை ஒன்று தென்பட்டதாக செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து அந்நிறுவனம் டிச.31-ம் தேதி ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலைபார்க்குமாறு உத்தரவிட்டது. இது தொடர்பாக சிறுத்தையையும், இன்போசிஸ் நிறுவனத்தையும் இணைத்து பல்வேறு மீம்ஸ்கள் வைரலாக வலம் வருகின்றன.

தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துக்குள் வந்த எதிர்பாராத விருந்தாளியின் வருகை இணையத்தில் ஏராளமான நகைச்சுவைத்துணுக்குள் வலம் வர வழிவகுத்தது. அதில் பல, இன்போசிஸின் இணைநிறுவனர் நாராயண மூர்த்தியின், நாட்டினை உலக அளவிலான போட்டியில் முன்னிலைப் படுத்த இந்திய இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்ற ஆலோசனையுடன் இணைத்து கலாய்த்து இருந்தனர்.

அதிகம் பேரால் பகிரப்பட்ட மீம்களில் சில இவ்வாறாக இருந்தன. அவை, ‘சிறுத்தையால் மட்டுமே இன்போசிஸ் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை பார்க்கும் வாய்ப்பை அளிக்க முடியும்’,‘அந்தச் சிறுத்தை இன்போசிஸ் நிறுவனத்தில் இளம்மென்பொருள் பொறியாளராக சேர்ந்துள்ளது. வாரத்துக்கு 70 மணிநேரம் வேலை பார்க்க கட்டாயப்படுத்தப்பட்டது’,‘இன்போசிஸ் வளாகத்தில் சிறுத்தை, பிடிக்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு, வேலைக்கு அமர்த்தப்பட்டது’. இந்த பதிவுகள் அனைத்திலும் சமீபத்திய பணியிட அழுத்த கலாச்சரம் குறித்த தந்திரமான நகைச்சுவைகள் ஒன்று கலந்திருந்தன.

முன்னதாக, கர்நாடகா மாநிலத்தின் மைசூருவில் உள்ள இன்போசிஸ் வளாகத்தில் டிச.31ம் தேதி சிறுத்தை ஒன்று காணப்பட்டதாக தகவல் வெளியானது. அதனால் நிறுவன வளாகத்தினுள் பாதுகாப்பு கருதி ஊழியர்கள் அன்று (டிச.31) அலுவலகத்துக்கு வரவேண்டாம் வீட்டில் இருந்து பணி செய்யுமாறு நிறுவனம் அறிவுறுத்தியிருந்தது.

டிசம்பர் 31ம் தேதி அதிகாலை 2 மணிக்கு இன்போசிஸ் வளாகத்தில் சிறுத்தை ஒன்று காணப்பட்டது சிசிடிவி காட்சியில் தெரியவந்தது என்று வனத்துறையினர் உறுதிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து சிறுத்தையைத் தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. என்றாலும் வெள்ளிக்கிழமை வரை சிறுத்தை பிடிபடவில்லை. வளாகத்துக்குள் எங்கோ ஒளிந்திருக்கும் சிறுத்தையைத் தேடும் பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், அது நெட்டிசன்களின் மீம்களில் இன்போசிஸ் நிறுவனத்துக்குள் வலம் வந்துகொண்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.