நடிகர் அஜித் சினிமாவிலிருந்து கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொண்டு இந்த ஆண்டு அக்டோபர் வரை கார் பந்தயத்தில் கவனம் செலுத்த உள்ளதாகக் கூறியிருக்கிறார்.
பந்தய வீரராக மட்டுமல்லாமல் அஜித் குமார் ரேசிங் அணியின் உரிமையாளராகவும் இருப்பதால், கார் பந்தய சீசன் முடியும் வரை அதில் முழுமையாக கவனம் செலுத்த இருக்கிறார்.
இந்தநிலையில் அஜித் சினிமாவிலிருந்து சற்று விலகி இருப்பதால் இந்த ஆண்டு திரைத்துறையில் அவருக்கு சைலண்ட் ஆண்டாக இருக்குமா என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அஜித், “எனக்கு இந்த ஆண்டு இரண்டு படங்கள் வெளியாகின்றன. நான் இரண்டு ப்ராஜக்ட்களை முடித்திருக்கிறேன், அவை வெளியாக தயாராக இருக்கின்றன.
ஒன்று ஜனவரியில் வெளியாகிறது. மற்றொன்று ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகும். இதனால் நான் என்னுடைய பந்தைய கரியரில் கவனம் செலுத்த முடியும்.” என்றார்.
பின்னர் தொகுப்பாளரிடம் “நீங்கள் அவர்களைப் பார்த்தீத்களா…” எனக் கேட்டு, ரசிகர்களை நோக்கி கை காட்டி”நான் அவர்களை வரைமுறையற்று அன்பு செய்கிறேன்” என்பதை ஆங்கிலத்தில், “I Love them un conditionally” என்றார்.
‘நீங்கள் இங்கு இருக்கும் மற்றும் யூடியூபில் இதைப் பார்க்கும் உங்கள் ரசிகர்களுக்கு எதாவது சொல்ல விரும்புகிறீர்களா…’ எனத் தொகுப்பாளர் கேட்டதற்கு, “கண்டிப்பாக… நான் பின்னர், அதைச் சரியான முறையில் செய்வேன்” என்றார் அஜித்.
ஜனவரி 10ம் தேதி வெளியாக இருந்த விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஜனவரியில் தனது திரைப்படம் ஒன்று வெளியாவதாக கூறியிருக்கிறார் அஜித்.
இதனால் ஏற்கெனவே இணையதளத்தில் பேசப்பட்டு வருவதுபோல, ‘ஜனவரி 20ம் தேதிக்கு மேல் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகுமா’ என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் கேட்கத் தொடங்கியிருக்கின்றனர்.