குவாஹாட்டி: அசாம் சுரங்க விபத்தில் நேற்று மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டன. அசாமின் திமா ஹசாவ் மாவட்டம், உம்ரங்சூ பகுதியில் நிலக்கரி சுரங்கம் செயல்பட்டது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அந்த சுரங்கம் மூடப்பட்டது. தற்போது அசாம் அரசின் கனிமவளத் துறை கட்டுப்பாட்டின் கீழ் சுரங்கம் உள்ளது.
சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் சட்டவிரோதமாக உம்ரங்சூ சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுத்து வந்தனர். கடந்த 6-ம் தேதி அந்த சுரங்கத்தில் சுமார் 42 தொழிலாளர்கள் 300 அடி ஆழத்தில் நிலக்கரியை வெட்டி எடுத்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென தண்ணீர் பெருக்கெடுத்து சுரங்கத்தை மூடியது. 33 தொழிலாளர்கள் வெளியே வந்து தப்பிய நிலையில், 9 தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டனர்.
தேசிய பேரிடர் மீட்புப் படை, ராணுவம், கடற்படை வீரர்கள் ஒன்றிணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடற்படையை சேர்ந்த நீச்சல் வீரர்கள், சுரங்கத்துக்குள் தண்ணீரில் மூழ்கி தொழிலாளர்களை தேடி வருகின்றனர். கடந்த 8-ம் தேதி ஒரு தொழிலாளியின் சடலத்தை கடற்படை வீரர்கள் மீட்டனர்.
தற்போது ஐந்து ராட்சத மோட்டார் பம்புகள் மூலம் சுரங்கத்தில் தேங்கியிருக்கும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆனால் தண்ணீர் மட்டம் குறையவில்லை. இந்த சூழலில் கடற்படை வீரர்கள் நேற்று 6-வது நாளாக தண்ணீரில் மூழ்கி மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
மேலும் 5 பேர் சுரங்கத்துக்குள் சிக்கி உள்ளனர். அவர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. அவர்களின் உடல்களை மீட்கும் வரை மீட்புப் பணி தொடர்ந்து நடைபெறும் என்று அசாம் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் கடற்படை வீரர்கள் கூறும்போது, “எலி வளை சுரங்கம் அமைத்து தொழிலாளர்கள் நிலக்கரியை வெட்டி எடுத்துள்ளனர். இந்த சுரங்கங்கள் மிகவும் குறுகலாக உள்ளன. நிலக்கரி துகள்களோடு சில அமிலங்களும் தண்ணீரில் கலந்துள்ளன. இதனால் தண்ணீருக்கு அடியில் மூழ்கும்போது எதுவுமே தெரியவில்லை. சுரங்கம் மிகவும் குறுகலாக இருப்பதால் மீட்புப் பணி பெரும் சவாலாக இருக்கிறது” என்று தெரிவித்தனர்.
சுரங்க விபத்தில் உயிர் தப்பிய தொழிலாளி ரியாஸ் அலி கூறும்போது, “நாங்கள் கையடக்க துளையிடும் இயந்திரம் மூலம் சுரங்கம் தோண்டி நிலக்கரியை எடுத்து வந்தோம். சுமார் 300 அடி ஆழத்தில் எலிவளை போன்று சுரங்கம் தோண்டி உள்ளே நீண்ட தொலைவுக்கு சென்றுவிட்டோம். திடீரென தண்ணீர் பெருக்கெடுத்து வந்தது. நான் உட்பட ஏராளமான தொழிலாளர்கள் அப்படியே படுத்து கொண்டோம். உள்ளே இருந்து வந்த தண்ணீரின் அழுத்தத்தால் சுரங்கத்துக்கு வெளியே நாங்கள் தள்ளப்பட்டு உயிர்பிழைத்தோம்” என்று தெரிவித்தார்.