இந்தியாவில் பெண்களுக்கான திட்டங்களும், அதிகரித்த வாக்காளர் எண்ணிக்கையும் – ஆய்வறிக்கை சொல்வதென்ன?

அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் ஜனநாயகத்தை ஊக்குவிக்கும் ஒரு பெரிய சக்தியாக செயல்படுகின்றன.

குறிப்பாக, பெண்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சமூக நலத்திட்டங்கள் இந்தியாவின் அரசியல் அமைப்பில் புதுமை செய்து, பெண் வாக்காளர்கள் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளன. சுகாதாரம், முத்ரா கடன்கள், கல்வியறிவு, மற்றும் வீட்டுவசதி போன்ற திட்டங்கள் கோடிக்கணக்கானப் பெண்களைத் தேர்தல் செயல்பாட்டில் ஆர்வமாக ஈடுபடுத்தியுள்ளன. இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் இது ஒரு முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையில் பெரும் உயர்வு

SBI ஆராய்ச்சி அறிக்கையின்படி, 2024 லோக் சபா தேர்தலை 2019 தேர்தலுடன் ஒப்பிடும்போது கூடுதலாக 1.8 கோடி பெண் வாக்காளர்கள் உருவாகி இருக்கின்றனர். பெண்களை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்ட சமூக நலத் திட்டங்களின் வெளிப்பாடே இதற்குக் காரணமாகும். இந்த ஆய்வு இந்திய தேர்தல் ஆணையத்தின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. அதன்படி, 1% கல்வியறிவு அதிகரித்திருக்கிறது, 45 லட்சம் பெண்கள் தேர்தலில் வாக்களித்திருக்கின்றனர். அதேபோல பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் கீழ் வீட்டுவசதி உரிமை 20 லட்சம் பெண்களை வாக்காளர்களின் பட்டியலில் சேர்த்திருக்கிறது.

பெண்களை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறிப்பாக முத்ரா கடன்கள், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY), சுகாதார சீர்திருத்தங்கள், கல்வியறிவு மேம்பாடு, மின்சார வசதிகளின் மேம்பாடு, குடிநீர் வசதிகளின் மேம்பாடு போன்ற திட்டங்கள் பெண்களின் வாக்களிப்பு எண்ணிக்கையில் பெரிய மாற்றங்களை உருவாக்கியுள்ளன. குறிப்பாக, 2019-க்கு பிறகு பெண்களை மையமாகக் கொண்ட திட்டங்களை செயல்படுத்தாத மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, இந்தத் திட்டங்களை செயல்படுத்திய 19 மாநிலங்களில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை சராசரியாக 7.8 லட்சம் அதிகரித்துள்ளது.

கல்வியறிவின் தாக்கம்

ஆய்வுகள் கூறும் படி, கல்வியறிவு விகிதத்தில் 1% உயர்வு மட்டும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையில் 25% அதிகரிக்க வழிவகுத்திருக்கிறது. இதன் விளைவாக, 2024 மற்றும் 2019 பொதுத் தேர்தல்களுக்கு இடையில் கூடுதலாக 45 லட்சம் பெண் வாக்காளர்கள் கல்வியறிவு மேம்பாட்டின் விளைவாக வந்துள்ளனர்.

வீட்டுவசதி மற்றும் சுகாதாரத்தின் பங்கு

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 74% வீடுகள் பெண்களின் சொந்தமாக உள்ளது. தனியாகவோ அல்லது கூட்டாகவோ இந்த உரிமை வழங்கப்பட்டதன் மூலம் சுமார் 20 லட்சம் பெண் வாக்காளர்கள் உருவாகி இருக்கின்றனர். அதேபோல், சுகாதார திட்டங்கள், குறிப்பாக பெண்களுக்கான நேரடி நலன்களை வழங்கும் திட்டங்கள், 2024 தேர்தலுக்கு சுமார் 21 லட்சம் பெண் வாக்காளர்களை சேர்த்துள்ளன. இது மட்டும் இல்லை, மின்சாரம் மற்றும் மேம்படுத்தப்பட்ட குடிநீர் அணுகல் போன்ற அடிப்படை வசதிகளும் தங்கள் பங்கை செலுத்தியுள்ளன. இந்த அறிக்கை, இந்திய அரசியலில் பெண்களின் பங்களிப்பை எவ்வாறு முன்னெடுப்பு செய்திருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

இந்த அறிக்கை இந்தியாவில் பெண்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் திட்டங்கள் அரசியல் சீர்திருத்தங்களில் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்துவதை நிரூபித்திருக்கிறது. இந்தத் திட்டங்கள் தேர்தல்களுக்கு மட்டுமல்லாமல், பெண்களின் சமூக-அரசியல் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.