ஈரோடு: `நாமம்' போட்டு காங்கிரஸார் எதிர்ப்பு; வைரலாகும் திமுக நிர்வாகியின் பதிவு – வெடிக்கும் சர்ச்சை

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கடந்த சில நாள்களுக்கு முன்பு உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 5-ஆம் தேதி கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. திமுக-வின் ஈரோடு மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளரான வி.சி.சந்திரகுமார் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்ப்பு இருந்தது. அதில், சந்திரகுமார் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தங்களிடம் இருந்து ஈரோடு கிழக்குத் தொகுதியை திமுக தட்டிப் பறித்துவிட்டதாக கூறி ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் நாமம் போட்டு எதிர்ப்பைத் தெரிவித்து அது தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளக்தளில் பகிர்ந்து வருகின்றனர். அதேவேளை, திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட செந்தில்குமார் “துரோக வலி” என தலைப்பிட்டு சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், “கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, ஏற்பட்ட துரோக வலியினால் இனிமேல் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு செய்வதில்லை என முடிவு செய்தேன்.

காங்கிரஸ்

அதுபோலவே நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருப்ப மனு கொடுக்கவில்லை. அதேபோல், 2023-இல் நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லாமல் அமைதியாகத்தான் இருந்தேன். ஆனால், கழக நிர்வாகிகள், தோழர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் அவசியம் கேள்.. இந்த முறை உனக்குத் தான் வாய்ப்பு என உற்சாகமூட்டியதும், நானும் சராசரி மனிதனாய் பதவி சபலம் ஏற்பட்டு, அனைத்து தகுதிகளும் இருப்பதாய் எனக்கு நானே எண்ணிக்கொண்டு அதற்கான முயற்சியை முன்னெடுத்தேன்.

நீண்ட நாட்களாக கழகப்பணியாற்றி வந்தாலும், ஈரோடு தொகுதி பல ஆண்டுகளாக மாவட்டச் செயலாளர் அல்லது மாற்றுக் கட்சியிலிருந்து வரும் வி.வி.ஐ.பி-களுக்கு என்று ஒதுக்கப்படுவதால் என்னைப் போன்றவர்களின் பெயர்கள் பரிசீலனைக்கே எடுக்கப்படுவதில்லை. 1980-இல் தொடங்கி 2021-வரை ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் ஈரோடு தொகுதியை குறி வைப்பதால் என்னை போன்ற ஈரோட்டை பூர்வீகமாக கொண்ட கழக நிர்வாகிகளின் பெயர்கள் பரிசீலனைக்கே வராமல் போய்விட்டது. கட்சியின் நலன் கருதி மாவட்டச் செயலாளர்களை எதிர்த்து போராடியதால், அப்போதெல்லாம் எவ்வித பொறுப்பிற்கும் வர முடியவில்லை.

செந்தில்குமார்

தற்போது மாவட்டச் செயலாளரை அனுசரித்து அவருடன் இருந்தாலும் வாய்ப்பைப் பெற முடியவில்லை. ஏனென்றால் நான் எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கமாட்டேன் என்பதாலும், இவன் எம்.எல்.ஏ ஆனால் கட்சியையும் கைப்பற்றி விடுவானே என்றும், எம்.எல்.ஏ என்ற நிலையோடு மட்டும் இருந்தால் பரவாயில்லை. அடுத்த நிலை அங்கீகாரத்திற்கு வந்து விடுவானே என்றும் பயந்த சிலர் எனக்கு வரும் வாய்ப்பை தட்டி விட்டனர். ஒவ்வொரு தேர்தலின் போதும் சில துரோகங்களால் நான் வீழ்த்தப்படுகிறேன். துரோகம் செய்யும் நபர்கள் மாறுகிறார்களே தவிர பாதிக்கப்படுபவன் நான் மட்டுமாகவே இருக்கிறேன்” என்று செந்தில்குமார் கருத்து பதிவிட்டுள்ளது ஈரோடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக ஈரோடு திமுக முன்னோடி நிர்வாகிகள் கூறுகையில், “செந்தில்குமாரைப் பொறுத்தவரை மாணவர் திமுக-வில் இருந்து நீண்டகாலமாக கட்சிக்காக உழைத்தவர். அவருக்கு இதுவரை பொறுப்பு ஏதும் வழங்கவில்லை. கடந்த ஆண்டு செந்தில்குமாரின் இல்லத் திருமணத்துக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், செந்தில்குமாருக்கு இதுவரை அங்கீகாரம் கிடைக்கவில்லை. விரைவில் அவருக்கான அங்கீகாரம் வழங்கப்படும் என தெரிவித்தார். அதன் அடிப்படையில்தான் இந்த முறை அவருக்கு சீட் வழங்கப்படும் என நினைத்தோம். ஆனால், அமைச்சர் முத்துசாமியின் பரிந்துரை காரணமாக தேமுதிக-வில் இருந்து வந்த சந்திரகுமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. செந்தில்குமார் கருத்தில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. அந்த அதிருப்தியில் அந்த பதிவை போட்டிருக்கலாம்” என்றனர்.

செந்தில்குமார்

செந்தில்குமாரிடம் பேசினோம். “2021 தேர்தலில் இருந்தே போட்டியிட வேண்டாம் என்றுதான் முடிவெடுத்திருந்தேன். இந்த முறை ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுக போட்டியிடுவது உறுதியானதால்தான் கட்சியின் சீனியர் என்ற முறையில் நிர்வாகிகள் வலியுறுத்தியதால் வாய்ப்பு கேட்டேன். சில அரசியல் காரணங்களால் தலைமை எனக்கு சீட் வழங்கவில்லை. அதிருப்தியாக இல்லாமல் எனது மனக்குமுறுலை வெளிப்படுத்தவே இந்தக் கருத்தை பதிவிட்டேன். கட்சித் தலைமை யாரை நிறுத்தியுள்ளதோ அவர் வெற்றிக்கு உழைப்பேன்” என்றார். ஒருபுறம் காங்கிரஸ் கட்சியினரின் எதிர்ப்பு மறுபுறம் செந்தில்குமாரின் கருத்துப் பதிவு என ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.