உ.பி கன்னவுஜ் ரயில் நிலைய விபத்து: இடிபாடுகளில் சிக்கிய 28 பேரும் மீட்பு

கன்னவுஜ்: உத்தரப் பிரதேச மாநிலத்தின் கன்னவுஜ் ரயில் நிலையத்தில் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த விபத்தில், இரவு முழுவதும் 16 மணிநேரம் நீடித்த மீட்பு பணியால், இடிபாடுகளில் சிக்கிய 28 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து மீட்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.

மேலும், மீட்கப்பட்டவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையத்தில் கட்டுமான பணி நடந்து வந்த கட்டிடத்தின் கூரையின் ஷட்டர் சனிக்கிழமை மதியம் இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், ரயில்வே ஊழியர்கள் உள்ளிட்ட மீட்பு குழுவினர் இரவு முழுவதும் பணி செய்து இடிபாடுகளை அகற்றி, அதனுள் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். இதனிடையே, மாவட்ட ஆட்சியர் சுப்ரந்த் குமார் சுக்ல், இந்த விபத்தினால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று நிம்மதி தெரிவித்தார்.

விபத்து குறித்து வெளியான சிசிடிவி காட்சியில், கட்டுமான தொழிலாளி ஒருவர் மேற்கூரையைத் தாங்குவதற்கான தற்காலிக ஷட்டர் அமைப்பை வைக்க முயலும்போது கூரை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது பதிவாகியுள்ளது. அந்தத் தொழிலாளி எடுத்துச்சென்ற தற்காலிக தூண் ஒன்று கூரையின் ஷட்டரில் இடித்து கூரை சரிந்து விழுந்ததை பார்க்க முடிகிறது.

இதனிடையே, விபத்துக்கான காரணத்தை ஆராய மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழுவினை சனிக்கிழமை வடகிழக்கு ரயில்வே அமைத்துள்ளது. இதில் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு தலைமை பொறியாளர், கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் (இஸ்ஸாத்நகர்), ரயில்வே பாதுகாப்பு படையின் தலைமை பாதுகாப்பு ஆணையர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நடைபெற்று வந்த கட்டுமான பணியானது, கன்னவுஜ் ரயில் நிலையத்தின் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் நோக்கத்தில் அடல் மிஷன் ஃபார் ரெஜுவனேஷன் அண்ட் அர்பன் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் கீழ் கட்டமானப்ப ணிகள் நடந்தது.

இந்நிலையில், விபத்தினால் சிறு காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000, படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சம் நிவாரணத் தொகையை வடகிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.