Rohit Sharma retirement | இந்திய கிரிக்கெட் அணியின் முழுநேர கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோருட் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) மும்பையில் ஆலோசனை நடத்தியது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் தோற்றது குறித்து விரிவாக பேசப்பட்டது. அனைத்து விதமான சூழல்களும் இந்தக் கூட்டத்தில் பிசிசிஐ விவாதித்தது. அதில் குறிப்பாக இந்திய அணிக்கு புதிய கேப்டன் தேர்வு செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா குறிப்பிட்ட காலத்துக்கு தான் கேப்டனாக தொடர விரும்புவதாகவும், அதற்குள் புதிய கேப்டனை அடையாளம் காணுமாறும் தெரிவித்துள்ளார். மேலும், தான் இந்திய அணியுடன் எப்போது வரை இருக்கப்போகிறேன், ஓய்வு முடிவை எப்போது அறிவிக்க உள்ளேன் என்ற தகவலையும் தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ முடிவு என்ன?
இந்திய கிரிக்கெட் வாரியம் ரோகித் சர்மா மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியதில், சில முடிவுகளை எடுத்திருக்கிறது. அதில் உடனடியாக கேப்டனை மாற்றும் முடிவில் பிசிசிஐ இல்லை. இப்போதைய கேப்டன் ரோகித் சர்மா அந்த பதவியில் தொடரலாம் என்றும், சாம்பியன்ஸ் டிராபி முடிந்ததும் முழுநேர கேப்டன் அறிவிக்கலாம் என திட்டமிட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரை ரோகித் சர்மா கேப்டன் பதவியில் தொடருவதில் எந்த மாற்றமும் இருக்காது. அந்த தொடர் முடிந்ததும் இந்திய அணியில் இருந்து ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரிடம் இடம் குறித்து அப்போதைய சூழலில் ஆலோசிக்க திட்டமிட்டுள்ளது.
ரோகித் சர்மா திட்டம் என்ன?
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளார். அந்த கோப்பையை வென்றாலும், தோற்றாலும், தன்னுடைய எதிர்கால கிரிக்கெட் பயணம் குறித்த முடிவை அப்போது அறிவிக்க உள்ளார். அதனால், அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் இந்த தொடருக்கு பிறகு ரோகித் சர்மாவின் சர்வதேச கிரிக்கெட் பயணம் குறித்த சர்ப்ரைஸ் முடிவு வெளியாகும் என கிரிக்கெட் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.
விராட் கோலி முடிவு என்ன?
விராட் கோலியை பொறுத்தவரை சாம்பியன்ஸ் டிராபி தொடர் சிறப்பாக அமைந்தால் இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக சர்வதேச கிரிக்கெட் விளையாடலாம் என்ற முடிவில் இருக்கிறார். இருப்பினும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இந்திய அணியில் இருக்க வேண்டும் என்றால் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் கட்டாயம் விளையாட வேண்டும் என அறிவுறுத்தியிருப்பதால், அது விராட் கோலிக்கு பிடிக்கவில்லை. அதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்ததும் விராட் கோலியின் சர்வதேச கிரிக்கெட் பயணம் தொடருமா? என்பது தெரியவரும்.
இந்தியா அணியின் அடுத்த போட்டிகள்
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக டி20, ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. பின்னர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் இந்திய அணி, அதன்பிறகு ஜூன் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கு முன்பாகவே விராட் கோலி, ரோகித் சர்மா இருவரும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற அதிக வாய்ப்புள்ளது.