சிறுமிக்கு காவல் ஆய்வாளர் பாலியல் தொந்தரவு கொடுத்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது: டிடிவி தினகரன்

சென்னை: திருப்பரங்குன்றத்தில் சிறுமிக்கு சிறப்பு காவல் ஆய்வாளர் பாலியல் தொந்தரவு கொடுத்த செய்தி அதிர்ச்சி அளிப்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினரகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ‘மதுரை திருப்பரங்குன்றத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சிறப்பு காவல் ஆய்வாளர் ஒருவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் தண்டனையை அதிகரிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்ட நாளில், காவல் ஆய்வாளர் ஒருவர், அதே குற்றச்சம்பவத்திற்காக கைது செய்யப்பட்டிருப்பது காவல்துறையினர் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்திருக்கிறது.

திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் முதலே, வழிப்பறி, செயின்பறிப்பு, லாட்டரி விற்பனை, போதைப்பொருள் விற்பனை போன்ற சட்டவிரோதச் செயல்களில் காவலர்கள் ஈடுபட்டு வருவதும், அதற்காக கைது செய்யப்படுவதும் காவலர்கள் மீதான நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையில் அமைந்திருக்கிறது. மேலும், சோதனை எனும் பெயரில் தெருவுக்கு தெரு நிற்கும் போக்குவரத்து காவலர்கள், சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி தரக்குறைவாக பேசுவதோடு, அபராதம் எனும் பெயரில் லஞ்சம் பெறுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆளுங்கட்சியினரின் ஏவல்துறையாக மட்டுமே காவல்துறையை பயன்படுத்தாமல், பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காகவும், காவல்துறையின் கண்ணியத்தை பேணிக்காப்பதற்காகவும், அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதோடு, காவலர்கள் குற்றவாளிகளாக மாறுவதற்கான அடிப்படை காரணங்களை கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்கான உரிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.