மதுரை: திமுக அரசின் முயற்சியின்றியே மதுரை – தூத்துக்குடி ரயில் பாதை திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்து இருக்கிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், சோழவந்தான் பகுதியில் ‘யார் அந்த சார்’ என்ற ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி இன்று நடந்தது. எதிர்க்கட்சி துணைத் தலைவர், முன்னாள் அமைச்சர் ஆர்பி. உதயகுமார் இருசக்கர வாகனங்ளுக்கும், நான்கு சக்கரவங்களுக்கும் ஸ்டிக்கர்களை ஓட்டினார்.
அப்போது அவர் பேசியது: ”மக்கள் கோரிக்கைகளை பிரச்சினைகளை சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் ஒவ்வொரு நாளும் அஞ்சாமல் எடப்பாடி பழனிச்சாமி முழக்கமிடுகிறார். பொதுவாக ஆளுநர் சட்டமன்றம் உள்ளே வரும்போதும், அவர் தமிழ்த்தாய் வாழ்த்து வாசிக்கும்போதும் நேரடி ஒளிபரப்பு செய்யவேண்டும். இதை அரசு இதை செய்யவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் குற்றம்சாட்டிய நிலையில், அதற்கு முதல்வர் பதிலளிக்கவில்லை. இன்றைக்கு மக்கள் மத்தியில் கடன் சுமை அதிகரித்துள்ளது. திமுக அரசு வெட்டி செலவு செய்கிறது. மக்கள் மீது கவலை இல்லை.
டங்ஸ்டன் பிரச்சனையில் எடப்பாடி பழனிச்சாமி ஆதாரத்துடன் பேசினார். அதற்கு முதல்வர் டங்ஸ்டனுக்கு அதிமுக ஆதரவு அளித்ததாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்று பேசுகிறார். அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் மீது அதிமுக ஆட்சியில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக அமைச்சர் ரகுபதி கூறுகிறார்.
திமுக ஆட்சியில் அவர் எந்த வழக்கும் பதியவில்லை என்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. யார் அந்த சார் என தெரிந்தால், ஆதாரம் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம் என முதல்வர் கூறுகிறார். இதற்கு அதிமுக கையில் அதிகாரம் இல்லை. மாணவி அந்த சார் யார்? அவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரையிலும் பட்டி,தொட்டி எங்கும் மக்களிடத்தில் இதுபற்றி எடுத்துச் சொல்லுவோம்.
மதுரை – தூத்துக்குடி ரயில்வே பாதை விருதுநகர் – அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி செல்லும் இத்திட்டத்தை திமுக அரசின் முயற்சியின்மையால் திட்டம் ரத்து செய்யப்பட்டது. ஏற்கெனவே மதுரை – தூத்துக்குடி எக்கனாமிக் காலிடார் திட்டம் அதிமுக அரசு கொண்டு வந்தது. இத்திட்டத்தையும் திமுக அரசு தான் கிடப்பில் போட்டது.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர், ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆன்லைன் திட்டத்தால் உள்ளூரில் காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்களுக்கு முறையாக டோக்கன் கிடைப்பதில்லை என, மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.” இவ்வாறு அவர் கூறினார்.