‘இன்பம் பொங்கும் தமிழ்நாடு’ என்று ஒவ்வொரு வீட்டின் வாயிலிலும் வண்ணக் கோலமிட்டு, தை மகளை வரவேற்போம். தமிழ்த் தாயைப் போற்றிடுவோம் என்று கட்சித் தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பொங்கலையொட்டி திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சமத்துவமே தமிழரின் பண்பாடு என்பதை உரக்கச் சொல்கின்ற வகையில், சாதி, மத பேதமின்றி, இயற்கையைப் போற்றி, உழைப்புக்கு முதல் மரியாதை செலுத்தி, உழவுக்குத் துணை நின்ற கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் மனிதநேயத் திருவிழாதான் பொங்கல். அது ஒன்றுதான் நம் பண்பாட்டுத் திருநாள் என்பதைத் திராவிட இயக்கம் நிலைநாட்டி, மக்களின் திருவிழாவாகக் கொண்டாடச் செய்து வருகிறது.
தமிழர்களின் தனித்துவமான பண்பாட்டின் மீது தாக்குதல் தொடுத்த வேறு பண்பாடுகளைத் தகர்ப்பதற்கான ஆயுதமாகத் பொங்கலைக் கொண்டாடி வருகிறோம். தமிழர்களுக்கென சிறந்த பண்பாடு உண்டு என்பதைக் காட்டும் வகையில் மக்கள் பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம்.
தமிழக மக்களின் விடியல் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழர்களின் இல்லத்திலும், உள்ளத்திலும் உண்மையான மகிழ்ச்சிப் பொங்க வேண்டுமென்ற நோக்குடன், அவர்களது வாழ்வுக்கு விடியல் தரும் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது திராவிட மாடல் அரசு.
சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தமிழக அரசின் சாதனைகளை எடுத்துரைக்கும் வகையிலான உரையைக் காழ்ப்புணர்வுடன் ஆளுநர் படிக்காமலும், தமிழ்த்தாய் வாழ்த்தை மதிக்காமல் வெளியேறினாலும், பேரவைத் தலைவரால் படிக்கப்பட்ட உரை, இந்தியாவில் தமிழ்நாடு எந்தெந்த இலக்குகளில் முன்னேறிய மாநிலமாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
இந்தியாவில் பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரக்கூடிய முதல் 20 நகரங்களில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், வேலூர் ஆகிய 8 மாநகரங்கள் இடம்பிடித்திருக்கின்றன. பெண்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் வகையில், பாலியல் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வழங்கும் வகையில் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்து, சுயமரியாதையுடன் சொந்தக் காலில் பெண்கள் நிற்க வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் இலக்கு.
திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கலை, இலக்கியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி, பரிசு வழங்க வேண்டும். மக்கள் பங்கேற்புடன் பண்பாட்டுத் திருவிழாவாக, பொங்கல் நன்னாளைக் கொண்டாடுவோம். ‘இன்பம் பொங்கும் தமிழ்நாடு’ என்று ஒவ்வொரு இல்லத்தின் வாயிலிலும் வண்ணக் கோலமிட்டு, தை மகளை வரவேற்போம். தமிழ்த் தாயைப் போற்றிடுவோம். மகிழ்ச்சிப் பெருவிழாவாகப் பொங்கலைக் கொண்டாடுவோம். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் கூறியுள்ளார்.