பெரியார் சித்தாந்தத்தை பேசி ஓட்டு கேட்க தயாரா? – திராவிட கட்சிகளுக்கு சீமான் கேள்வி

பெரியார் சித்தாந்தத்தை பேசி ஓட்டு கேட்க தயாரா என திராவிட கட்சிகளை நோக்கி நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: மக்களவைத் தேர்தல் முடிவுகளின்படி, மாநில கட்சியாக நாம் தமிழரை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது மகிழ்ச்சியளிக்கிறது. எங்களுக்கு விவசாயி சின்னமே கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் போட்டியிடும். பொங்கலன்று வேட்பாளரை அறிவிக்கிறேன். பிராமணர்களுக்கு பயந்து இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தது, சாணிக்கு பயந்து மலத்தின் மீது கால் வைத்ததற்கு சமமாகிவிட்டது என திராவிடத்துக்கு அடித்தளமிட்ட பெரியார் பேசியிருக்கிறார். பெரியாரை, திராவிடத்தை, திமுகவை எதிர்த்தால் ஆரியர்கள் உள்ளே வந்துவிடுவார்கள் என்கின்றனர். பெரியார் கடைசி வரை ஆரியத் தலைமையுடன் நட்போடு இருந்தார். மணியம்மையுடனான திருமணத்தின்போது ஆரியத்தை துணைக்கு அழைத்தார். முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, ராஜாஜியுடன் கூட்டணி வைத்தார். இப்போது ஆரியம் உள்ளே வந்துவிடும் என்று சொல்பவர்களுக்கு, அப்போது ஆரியத் தோளில் கைபோட்டு சென்று முதல்வர் நாற்காலியில் அமரும்போது தெரியவில்லையா.

பெரியாரை முன்னாள் முதல்வர் கருணாநிதியோடு மட்டுந்தான் ஒப்பிட முடியும். அம்பேத்கரையும் பெரியாரையும் ஒரே கோட்டில் நிறுத்துவதை கைவிட வேண்டும். இருவரும் சிந்தனைகளில் ஒத்து போகிறார்கள் என நிருபித்தால் மன்னிப்பு கோருகிறேன். ஆதாரத்தை பூட்டி வைத்து எங்களிடம் ஆதாரம் கேட்கின்றனர். பெரியார் குறித்த தகவல்களை பொதுவெளியில் வைக்க வேண்டும். அதை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டாலும் மன்னிப்பு கோருவேன். பெரியார் சித்தாந்தங்கள் குறித்து பேசி ஓட்டு சேகரிக்க திராவிட கட்சிகள் தயாரா? திமுக கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, ஒரே வீட்டில் இருவர் அமைச்சர்களாயிருந்தனர். இது தான் கொடுமையான சனாதனம்.

வீட்டில் சனாதனத்தை அவர்களால் ஒழிக்க முடியவில்லை. தமிழகத்தில் இடஒதுக்கீட்டை உறுதி செய்தது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்னும் ஆரியம். அவருக்கு பாராட்டு நடத்தியது திராவிடர் கழகத் தலைவர் வீரமணி. திராவிடத்தில் போர்க்குணம் இல்லை. மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என திராவிடம் அழுது புலம்பிக் கொண்டிருக்கிறது. மாநில உரிமையை கூட மீட்க முடியாமல் 40 எம்.பி.,க்களை வைத்து என்ன செய்ய போகிறார்கள். பெரியார் இப்போது தேவையில்லை என ஆ.ராசா எம்.பி. சொல்கிறார். இதையேதான் நானும் சொல்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.