மதுரை மாவட்டத்தில் கோயிலுக்கு சென்ற 14 வயது சிறுமியை போலீஸ் எஸ்.எஸ்.ஐ ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்து கைதாகியுள்ள சம்பவம் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தில் இன்றுவரை கொந்தளிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, திமுகவின் கூட்டணிக் கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக சம்பவத்துக்கு சில நாட்களுக்கு முன்பே, மதுரை மாவட்டத்தில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் எஸ்.எஸ்.ஐ ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் வெளிவராமல் மறைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து விசாரித்தபோது, திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் கார்த்திகை தீப விழாவிற்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து மக்கள் வருகை தருவார்கள். பாதுகாப்புக்காக பல்வேறு இடங்களிலிருந்து போலீசார் கூடுதலாக பணியமர்த்தப்படுவார்கள். அந்த அடிப்படையில் மதுரை திடீர் நகர் காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ ஜெயபாண்டி பாதுகாப்பு பணிக்கு வந்திருக்கிறார்.
அப்போது குடும்பத்தினருடன் கோயிலுக்கு வந்த 14 வயது சிறுமி கிரிவலப் பாதையில் உள்ள கழிவறைக்கு சென்றிருக்கிறார். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவந்த எஸ்.எஸ்.ஐ ஜெயபாண்டி சிறுமியை பின் தொடர்ந்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
நீண்ட நேரமாகியும் திரும்ப வராததால் பதற்றமான பெற்றோர், கழிவறைக்கு சென்று பார்த்தபோது அங்கு மயங்கிய நிலையில் மகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியானவர்கள் அங்கிருந்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
உடனே மதுரை மாவட்ட சைல்ட் லைனில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து சைல்ட் லைன் அலுவலர்களும் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரும், சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் இந்த கொடுமையை செய்தது எஸ்.எஸ்.ஐ ஜெயபாண்டிதான் என்பது உறுதியானது.
அதைத்தொடர்ந்து ஜெயபாண்டி மீது போக்சோ சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டவர், பின்பு சிறைக்கு அனுப்பப்பட்டார். பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு எதிராக சட்டங்களை இன்னும் கடுமையாக்கி தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், மதுரையில் போலீஸ் எஸ்.எஸ்.ஐ, கோயிலுக்கு வந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை இந்த சம்பவம் தற்போது வெளியாகி அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.