புதுடெல்லி: நாடு முழுவதும் பல இடங்களில் கைப்பற்றப்பட்ட ரூ.2,400 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை அழிக்கும் நடவடிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார்.
போதைப் பொருள் கடத்தல் சம்பவம் நாடு முழுவதும் நடைபெறுகிறது. இது நாட்டின் பாதுகாப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண, போதைப் பொருள் கடத்தலை ஒழிக்கும் நடவடிக்கை குறித்து ஆராய ‘போதைப் பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு’ என்ற தலைப்பிலான கருத்தரங்கை, போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவு (என்சிபி) டெல்லியில் நேற்று நடத்தியது. இந்த கருத்தரங்கை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார்.
அதன்பின்பு நாடு முழுவதும் கைப்பற்றப்பட்ட 44,792 கிலோ எடையுள்ள போதைப் பொருட்களை அழிக்கும் நடவடிக்கையை அமித்ஷா தொடங்கி வைத்தார். 2 வார காலத்தில் இந்த போதைப் பொருட்கள் அழிக்கப்படும். இவற்றின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.2,411 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேசம் போபாலில் போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் புதிய அலுவலகத்தையும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் போதைப் பொருள் தடுப்பு உதவி எண்ணை நீட்டிக்கும் மனாஸ்-2 திட்டத்தையும் அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.
டெல்லியில் நடைபெறும் போதைப் பொருள் கருத்தரங்கில் தேசிய போதைப் பொருள் தடுப்பு உதவி எண் மூலம் பெறப்படும் தகவல்களை உடனுக்குடன் மாநிலங்களுடன் பகிர்வது, போதைப் பொருள் ஒழிப்பில் மாநிலங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பீடு செய்வது, போதைப்பொருள் தடுப்பு ஒருங்கிணைப்பு முறையின் செயல்பாட்டை மதிப்பீடு செய்வது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும்.